2012-08-10 15:41:33

இரவுநேரப் பணிகள் இதயநோய்க்கு வழிவகுக்கும்: எச்சரிக்கைத் தகவல்


ஆக.10,2012. சரியாக உறங்காமல் இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களில் 23 விழுக்காட்டினர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு உண்ணாமல் இரவு நேரங்களில் துரித உணவு வகைகளை அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால், உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு இளையோர் ஆளாகி விடுகின்றனர்.
இன்றைய இயந்திர வாழ்வில், கணனித் துறை, மற்றும் BPO மையங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால், தூங்காமல் விழித்திருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்குச் செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்றும், நாள்தோறும் 30 நிமிடங்களாகிலும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.