2012-08-10 15:36:09

அணுசக்திக்கு மாற்றுச் சக்திகளைக் கண்டுபிடிக்கும் தார்மீகக் கடமை ஜப்பான் அரசுக்கு அதிகம் உள்ளது


ஆக.10,2012. அணுசக்திக்கு மாற்றுச் சக்திகளைக் காணும் தார்மீகக் கடமை ஜப்பான் அரசுக்கு அதிகம் உள்ளது என்று நாகசாகி நகர மேயர் Tomihisa Taue கூறினார்.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு வீசியதன் 67ம் ஆண்டு நினைவு இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்டபோது, அந்நினைவு நிகழ்வில் பேசிய நாகசாகி மேயர் Taue, புகுஷிமா அணு உலை விபத்தைக் குறித்தும் பேசினார்.
கதிர்வீச்சு ஆபத்திலிருந்து மக்களைக் காப்பது ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் தலையாயக் கடமை என்று கூறிய மேயர் Taue, அணு உலைகளின் கழிவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு ஆபத்து இருப்பதை முக்கியமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
புகுஷிமா அணு உலை ஆபத்துக்குப் பின், ஜப்பான் மாற்றுச் சக்திகளைத் தேடவேண்டும் என்ற கோரிக்கையை நாகசாகி மேயர் Tomihisa Taue தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் 80,000க்கும் அதிகமானோர் இறந்தனர். கதிர்வீச்சு விளைவுகளுடன் இன்னும் வாழ்ந்து வருபவர்கள் 39,324 பேர் என்றும், இவர்கள் அனைவரும் 77 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.