2012-08-09 16:30:07

தென் கொரியாவில் திருப்பலி நேரத்தில் காவல்துறையினர் நுழைந்து தாக்குதல்


ஆக.09,2012. தென் கொரியாவின் Jeju தீவில் இப்புதனன்று நடைபெற்ற ஒரு திருப்பலியில் காவல்துறையினர் நுழைந்து தாக்கியதில், திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர் உட்பட பலர் காயமடைந்தனர்.
தென் கொரியாவில் Jeju என்ற தீவில் கப்பல்படைத் தளம் ஒன்றை அமைக்க அரசு முயன்றுவருகிறது. இதனால், அத்தீவில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களும், அத்தீவின் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், இந்த முயற்சியை எதிர்த்து தலத்திருஅவை போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் இயேசு சபை அருள் பணியாளர் Bartholomew Mun Jung-hyun, அம்மக்களுக்கு இப்புதன் மாலை திருப்பலி நிகழ்த்தியபோது அங்கு வந்த காவல் துறையினர், திருப்பலியைத் தடுக்க முயன்றனர்.
திருப்பலி ஆற்றிய அருள்தந்தை Mun அவர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர் கையில் ஏந்திய திருநற்கருணையோடு கீழே விழந்தபோது, காவல்துறையைச் சார்ந்த ஒருவர் காலில் திருநற்கருணை மிதிபட்டதென்றும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
நடைபெற்ற இந்த அராஜகச் செயலுக்கு காவல்துறை தகுந்த விளக்கம் தர வேண்டும் என்று Cheju மறைமாவட்ட நீதி அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை John Ko Buyeong-soo கூறினார்.
Jeju தீவு உலகப் பாரம்பரியத் தலம் என்று UNESCO அறிவித்துள்ளதையும் மீறி, அங்கு தென்கொரிய அரசு கடற்படை தளத்தை அமைப்பது சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதகமாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.