2012-08-08 15:00:27

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஆக, 08, 2012. திருத்தந்தையர்களின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த வாரம்போல் இப்புதனன்றும் அங்கேயே தன் வாராந்திர மறைபோதகத்தை வழங்கினார்.
RealAudioMP3 இப்புதனன்று காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் இடம்பெற்ற பொதுமறைபோதகத்தில், இப்புதன் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித Domenic Guzman குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.
செபத்தின் மனிதராக விளங்கிய புனித தோமினிக், போதகர் சபை என்றும் அறியப்படும் சாமிநாதர் சபையை நிறுவியவர். இந்த புனிதக் குருவைப்பற்றி அறிந்தவர் வழங்கும் சாட்சியமெல்லாம், 'இவர் எப்போதும் கடவுளோடுப் பேசுபவராகவும் அல்லது கடவுளைப்பற்றி பேசுபவராகவும் இருந்தார்' என்பதே. கடவுளோடு ஆழமான உறவை புனித தோமினிக் கொண்டிருந்தார் என்பதை மட்டுமல்ல, இறைவனுடன் ஆன ஒன்றிணைந்த வாழ்வுக்கு ஏனையோரையும் கொணரும் பணியில் அர்ப்பணத்துடன் செயல்பட்டார் என்பதை இந்த சாட்சியங்கள் காட்டுகின்றன. இப்புனிதரின், 'செபிப்பதற்கான ஒன்பது வழிகள்' என்பதும் நமக்குப் பயனுள்ளதாக உள்ளது. இவரின் தியான வாழ்வு மிகவும் ஆழம் நிரம்பியதாக இருந்தது. இறைவனுடன் உரையாடல் மேற்கொள்ளும்போது, தன்னையே மறந்தவராக மணிக்கணக்கில் ஈடுபட்டார். இறைவனுடன் உரையாடும்போது அவர் வெளிப்படுத்திய முகப்பாவங்களிலிருந்தே அது எவ்வளவு ஆழமானது என்பதை மற்றவர்கள் உணர முடிந்தது. இந்த இறை உரையாடல் வழி பெற்ற சக்தியினால் உந்தப்பட்டவராக தன் தினசரி நடவடிக்கைகளைத் தாழ்மையுடன் தொடர்ந்து ஆற்றினார்.
நம் ஒவ்வொரு வாழ்வுச் சூழலிலும் நாம் வழங்கவேண்டிய விசுவாச சாட்சியத்தின் மூலக்காரணமாக இருப்பது செபமே என்பதை கிறிஸ்தவர்களாகிய நமக்கு புனித தோமினிக் நினைவுறுத்துகிறார். RealAudioMP3 அதேவேளை, செபத்தின் வெளிப்புற அடையாளங்களான, முழந்தாளிடுதல், இறைவன் முன் எழுந்து நிற்பது, சிலுவையில் நம் பார்வையை நிலைநிறுத்துவது, அமைதியாக ஒன்று கூடுதல் போன்றவைகளையும் சொல்லித்தருகிறார்.
நம் அனைவருக்கும் தேவைப்படும் அன்பையும் அமைதியையும் கொணரவல்ல இறைப்பிரசன்னத்தை நோக்கியப் பாதையை ஒளிர்வித்து, நம்மைச்சுற்றியிருப்பவர்கள் நுழைய உதவுவதற்கு, நம் செப வாழ்வு இன்றியமையாத ஒன்று என்பதையும் நினைவுறுத்தினார் திருத்தந்தை.
தன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.