2012-08-07 16:02:11

வட இலங்கையில் கடுமையான வறட்சி


ஆக.07,2012. இலங்கையின் வடக்கே ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறுபோக நெல்விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைய நேரிட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின்கீழ் மூவாயிரம் ஏக்கர் நெற்பயிர் இதுவரையில் நீரின்றி கருகியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சிறுபோக நெல் சாகுபடிக்கு இம்முறை சீரான நீர்விநியோகம் செய்யப்படவில்லை என்றும் இதுவே இந்தப் பாதிப்புக்குக் காரணம் என்றும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கடும்வறட்சி காரணமாக வவுனியாவிலும் நெல்விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஒருபோதும் இல்லாத வகையில் வவுனியா நகருக்கு அருகிலுள்ள குளத்தில் நீர் முழுமையாக வற்றிக் குளம் வறண்டிருப்பதனால் குளத்து மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.