2012-08-07 15:56:00

சிரியா:கிறிஸ்தவர்கள் பிரிவினைவாதப் போரைப் புறக்கணிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்தல்


ஆக.07,2012. சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் ஆயுதங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் மற்றும் உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட வேண்டாமெனக் கேட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
தற்போது சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை அந்நாட்டுக்கு வெளியிலிருந்தும் தூண்டிவிடப்படுவதால் அது இன்னும் கடுமையாகப் போய்க் கொண்டிருக்கின்றது என்று கவலை தெரிவித்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமொரு பிரிவினைவாதக்குழுவாக மாறுவதைத் தாஙக்ள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் சிரியா நாட்டுக் குடிமக்கள், மற்ற குடிமக்களோடு அமைதியில் வாழவே நாங்கள் விரும்புகிறோம், நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையுமே விரும்புகிறோம் என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர் அத்தலைவர்கள்.
இதற்கிடையே, சிரியாவில் புரட்சியாளர்களால் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள 48 ஈரானியத் திருப்பயணிகள் விடுதலை செய்யப்படுவதற்கு துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் உதவிகளைக் கேட்டுள்ளது ஈரான்.







All the contents on this site are copyrighted ©.