2012-08-07 15:52:04

அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சீக்கிய சமுதாயத்துக்கு ஆயர்கள் அனுதாபம்


ஆக.07,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் விஸ்கான்சின் மாநில சீக்கியரின் குருத்வாராவில் நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூடு துயர நிகழ்வால் வருந்தும் சீக்கிய சமுதாயத்துக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவை.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றம் பல்சமய ஆணையத் தலைவர் பால்டிமோர் ஆயர் Denis Madden வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க ஆயர்கள் சீக்கிய சமுதாயத்துடன் கைகோர்த்து அனைத்துவிதமான வன்முறைகளையும், குறிப்பாக, சமய சகிப்பற்றதன்மையால் தூண்டப்பட்ட வன்முறையைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் குடும்பமாக இணைந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு எதிராக வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்டுள்ள இவ்வன்முறை ஆயர்களை மிகவும் வருத்தப்படுத்தியிருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
இந்தியாவின் பஞ்சாபில் 1400களில் ஆரம்பிக்கப்பட்ட சீக்கிய மதத்தில் தற்போது உலக அளவில் ஏறக்குறைய மூன்று கோடி விசுவாசிகள் உள்ளனர். இவர்களில் ஏறக்குறைய 5 இலட்சம் பேர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளனர்.
இவ்வன்முறையில் ஏழுபேர் இறந்துள்ளனர் மற்றும் இருபது பேர் காயமடைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.