2012-08-06 16:38:10

லாஸ் ஆஞ்சலஸ் நகரில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கொண்டாடிய குவாதலுப்பே அன்னை மரியாவின் திருநாள்


ஆக.06,2012. அமெரிக்கக் கண்டத்தில் நற்செய்தி முதன்முறை அறிவிக்கப்பட்டபோது அன்னை மரியா நற்செய்திப் பணியாளர்களுடன் இருந்து செயல்பட்டதுபோல, இன்று நாம் நற்செய்தியைப் புதிய வழிகளில் பறைசாற்றும்போதும் குவாதலுப்பே அன்னை மரியா நம்முடன் பணியாற்றுவார் என்று லாஸ் ஆஞ்சலஸ் பேராயர் Jose Gomez கூறினார்.
அமெரிக்காவின் லாஸ் ஆஞ்சலஸ் நகரின் Memorial Coliseum எனப்படும் ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி, குவாதலுப்பே அன்னை மரியாவின் திருநாளை இஞ்ஞாயிறன்று கொண்டாடினர். இத்திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் Gomez, குவாதலுப்பே அன்னை மரியா மெக்சிகோ மக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கக் கண்டத்தில் வாழும் அனைவருக்குமே தனிப்பட்ட வகையில் தாயாக விளங்குகிறார் என்று கூறினார்.
Knights of Columbus என்ற அனைத்துலகக் கிறிஸ்தவ அமைப்பும், லாஸ் அஞ்சலஸ் உயர் மறைமாவட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்பெருவிழாவில் குவாதலுப்பே அன்னையின் உருவம் பதிந்த அற்புதத் துணியின் ஒரு பகுதியாக விளங்கும் புனிதப் பொருள் மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.
லாஸ் அஞ்சலஸ் நகரின் கத்தோலிக்க வரலாற்றில் இவ்வளவு மக்கள் கூடிவந்தது அண்மையக் காலங்களில் இருந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும், Knights of Columbus அமைப்பினர் 2009ம் ஆண்டில் அரிசோனாவில் இதையொத்த ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.