2012-08-06 16:35:44

பிரச்சனைகளை வாய்ப்புக்களாகக் காண்பதற்குக் கீழைநாடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன - இயேசுசபையின் அகில உலகத் தலைவர்


ஆக. 06,2012. நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தையும் வாய்ப்புக்களாகக் காண்பதற்குக் கீழை நாடுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன என்று இயேசுசபையின் அகில உலகத் தலைவர், அருள்தந்தை Adolfo Nicolas கூறினார்.
அண்மையில் கொண்டாடப்பட்ட புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளையொட்டி இயேசுசபைத் தலைவர் வழங்கிய ஒரு மறையுரையில் உலகம் சந்தித்து வரும் பிரச்சனைகளை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளின் கலாச்சாரக் கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
இம்மறையுரையின் ஒரு தொடர்ச்சியாக, அவர் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைகளை எவ்விதம் மாற்றுக் கண்ணோட்டத்துடன் காணவேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
தீர்க்கமுடியாதப் பிரச்சனை என்ற எண்ணத்தை வெளிப்படுத்த, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் “Kiki” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய இயேசு சபைத் தலைவர், இந்த வார்த்தையைப் பதம் பிரித்து பொருள் கண்டால், ஆபத்து, வாய்ப்பு என்ற இரு எண்ணங்களை “Kiki” என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கியுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் இன்றும் பொருளுள்ளதாய் கருதப்படும் குடும்பம் என்ற உண்மையை அடித்தளமாகக் கொண்டு, இவ்வுலகை நாம் கட்டியெழுப்பினால் சமுதாயம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் என்ற அனைத்துத் துறைகளிலும் நாம் தகுந்த தீர்வுகளைக் காணமுடியும் என்றும் இயேசு சபைத் தலைவர் எடுத்துரைத்தார்.
ஆசிய, ஆப்ரிக்கக் கலாச்சாரங்களில் காணப்படும் பல உயர்ந்த எண்ணங்களை மேற்கத்திய கலாச்சாரங்களில் வாழ்பவர்கள் கற்றுக்கொண்டால், இன்றைய ஆபத்துக்களை நாம் நேர்மறையான மனதோடு எதிர்கொள்ளமுடியும் என்று அருள்தந்தை Adolfo Nicolas தன் பேட்டியில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.