2012-08-06 16:13:45

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


ஆக.06,2012. புதிய, முடிவற்றவாழ்வைப் பற்றி இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை நாம், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலானதாக கொள்ளவேண்டும் என இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வுலகத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதை விடுத்து, அதையும் தாண்டி நாம் செல்வதற்கு உதவ இயேசு விரும்புகிறார் என்ற திருத்தந்தை, வாழ்வுக்கு முழு அர்த்தத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் நம் இருப்பின் மையம் இயேசு கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமே என உரைத்தார்.
புனித அருளப்பர் நற்செய்தியில் காணப்படும் வாழ்வின் அப்பம் குறித்த உரையாடலையொட்டி தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, 'வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபருக்கு பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைத்து, நாம் இவ்வுலகத் தேவைகளைத் தாண்டிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இஸ்ராயேலர்களுக்கு வானிலிருந்து வழங்கப்பட்ட மன்னாவைக்காட்டிலும் மேலான ஒன்றால் விசுவாசிகள் ஊட்டம் பெற்றுள்ளார்கள், அதுவே கிறிஸ்து, ஏனெனில் அவர் ஏதாவது ஒன்றை வழங்குபவராக மட்டுமல்ல, தன்னையே வழங்குபவராக வருகின்றார் என மேலும் கூறினார் திருத்தந்தை.
நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவர் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வை நிறைவாகப் பெறுவோம் எனவும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.