2012-08-06 16:47:14

கவிதைக் கனவுகள் – மறக்க முடியவில்லையே


1945ம் ஆண்டு ஆகஸ்டு 6
மனிதகுல வரலாற்றில் மாறாத வடுக்களை
ஏற்படுத்திய மறக்க முடியாத தினம்
சிறுபையன் (Little Boy) அணுகுண்டு
60 கிலோ எடையுடன்
ஹிரோஷிமாவைச் சுட்டழித்த தினம்.
ஒரு கோடிச் சூரியன்கள் தோன்றி மறைந்தது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்திய தினம்.
அணு ஆயுதப் பேரழிவை
அமெரிக்க அறிவியலாளர் பரிசோதித்த தினம்.
அணு ஆயுத அபாயத்தை
காலமெல்லாம் உணர்த்திக் கொண்டிருக்கும் தினம்
உலகினரின் அனுதாபப் பேரலைகளை
ஜப்பானுக்கு தேடித்தந்த தினம்.
ஜப்பானை உலக நாடுகள் இன்று
ஏறெடுத்துப் பார்க்கக் காரணமான தினம்.
உலகப் போர் முடிந்தது, ஆனால்
அதன் வடுக்கள் இன்னும் அழியவில்லை..
ஆண்டுதோறும் மௌன அஞ்சலிகள்
அமைதிக்காகப் பிரார்த்தனைக் கூட்டங்கள்
ஆனால், நாடுகளில்
பருவமழைகூடப் பொய்த்து விடுகின்றது
குண்டுமழை மட்டும் நின்றபாடில்லை.
அமைதி அணு ஆயுதங்களால் பிறப்பதல்ல
அது மன்னிப்பால் பிறப்பது.
ஹிரோஷிமா நாகசாகி வடுக்களை
மறக்கச் செய்வது மன்னிப்பு.







All the contents on this site are copyrighted ©.