2012-08-06 16:26:23

Knights of Columbus அமைப்பின் சமய சுதந்திரம் குறித்த நடவடிக்கைகளுக்குத் திருத்தந்தை பாராட்டு


ஆக.06,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பணியைச் செய்துவரும் Knights of Columbus என்ற பிறரன்பு அமைப்பின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சமய சுதந்திர உரிமை குறித்து மீண்டும் விளக்கி அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முயற்சிகளை எடுத்துவரும் இவ்வேளையில், Knights of Columbus அமைப்பு, சமய சுதந்திரத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளில் தளராமல் ஈடுபட்டு வருவதை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
இம்மாதம் 7ம் தேதி, இச்செவ்வாய் முதல் 9ம் தேதி வரை கலிஃபோர்னியாவின் Anaheimல் 130வது உச்சி மாநாட்டை நடத்தவுள்ள இந்தப் பிறரன்பு அமைப்புக்குத் திருத்தந்தையின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை கர்தினால் பெர்த்தோனே, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.
18 இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள Knights of Columbus, உலகின் மிகப்பெரிய சகோதரத்துவ அமைப்பாகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மிகவும் செயல்திறத்துடன் இயங்கிவரும் முக்கிய பிறரன்பு அமைப்பாகவும் இது இருக்கின்றது. கடந்த ஆண்டில் 15 கோடியே 80 இலட்சம் டாலரையும் 7 கோடி மணி நேரங்களையும் பிறரன்பு பணிகளுக்கென இவ்வமைப்பு செலவழித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.