2012-08-04 14:46:54

பிலிப்பீன்சில் குடும்பக்கட்டுபாடு மசோதாவுக்கு எதிராகச் செபப் பேரணிகள்


ஆக.04,2012. பிலிப்பீன்ஸ் அரசு அமல்படுத்துவதற்குத் திட்டமிட்டுவரும் குடும்பக்கட்டுபாடு குறித்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டின் ஆயர்கள் தலைமையில் செபப் பேரணிகளும் திருவழிபாடுகளும் இச்சனிக்கிழமை நடத்தப்பட்டன.
கருத்தடைச் சாதனங்களுக்கு நிதியுதவி செய்தல், குடும்பக்கட்டுப்பாட்டை அமல்படுத்துதல், பள்ளிகளில் பாலியல் கல்வியை புகுத்துதல் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கும் இம்மசோதா, அறநெறி விழுமியங்களைக் கறைப்படுத்தும் மற்றும் குழந்தைகள் தொல்லை கொடுப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் என்று Pangasinan பேராயர் Socrates Villegas இப்பேரணியில் எச்சரித்தார்.
“Prayer Power Rally” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பேசிய Lipa பேராயர் Ramon Arguelles, இம்மசோதா குறித்து தீர்மானம் செய்யும் வாக்கெடுப்பு பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வருகிற செவ்வாய்க்கிழமை வரை விசுவாசிகள் தொடர்ந்து செபங்களையும் தியாகங்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மழையையும், காற்றையும்கூடப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்டு இந்த மசோதாவுக்கு எதிரானத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஆசியாவில் மக்கள்தொகை அதிவேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் பிலிப்பீன்சும் ஒன்று எனக் கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.