2012-08-04 14:51:38

தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில் சிரியா கத்தோலிக்கர் பாரம்பரிய நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர்


ஆக.04,2012. அன்னை கன்னிமரியை மேன்மைப்படுத்தும் நோக்கத்தில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து 14ம் தேதி வரை நோன்பு இருக்கும் சிரியா நாட்டின் கீழைரீதிக் கத்தோலிக்கர், அந்நாட்டின் அமைதிக்காகச் செபிக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் மெல்கித்தே கிரேக்கரீதி கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் 3ம் Gregorios Laham.
ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பிக்கப்படும் விண்ணேற்பு அன்னைப் பெருவிழாவுக்கென இரண்டு வாரப் பாரம்பரிய நோன்பைக் கடைப்பிடித்து வரும் சிரியா நாட்டுக் கத்தோலிக்கருக்கென அறிக்கை வெளியிட்டுள்ள முதுபெரும் தலைவர் 3ம் Gregorios, இம்மக்கள் சிரியாவில் வன்முறைகள் நிறுத்தப்படவும், அந்நாட்டினரின் பாதுகாப்புக்காகவும் செபித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா நாட்டினர் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, மன்னித்து, ஒருவர் ஒருவருடன் ஒப்புரவாகி சகிப்புத்தன்மையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கும், அழிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி வளர்ச்சி மற்றும் வளமைக்காக உழைப்பதற்கு இன்னும் அவர்களால் இயலும் என்றும் அவரின் அறிக்கை கூறுகிறது.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் நோன்பிருக்கும் இந்நாள்களில், இசுலாமியரும் ரமதான் நோன்பிருக்கின்றனர் என்பதையும் முதுபெரும் தலைவர் 3ம்Gregorios குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் வன்முறைகளால் ஏறக்குறைய 4 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.