2012-08-04 14:45:39

திருத்தந்தை : தங்களை அன்பு செய்யாதவர்கள், தங்களோடு வாழ்பவரை அன்பு செய்ய முடியாது


ஆக.04,2012. தங்களை அன்பு செய்யாதவர்கள், தங்களோடு வாழ்பவரை அன்பு செய்ய முடியாது, அவர்களுக்கு உதவ முடியாது மற்றும் அமைதியின் தூதுவர்களாக இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த ஏப்ரல் 16ம் தேதி தனது 85வது பிறந்தநாளைச் சிறப்பித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை வாழ்த்துவதற்கு அவரின் தாயகமான ஜெர்மனியின் பவேரியாப் பகுதியிலிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்கு இவ்வெள்ளிக்கிழமை மாலை வந்து அப்பகுதியின் கலாச்சார மரபுகளில் இன்னிசை விருந்தளித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உரையாற்றியபோது, பவேரிய மகிழ்ச்சி குறித்து விளக்கினார்.
பவேரியக் கலாச்சாரம் நாகரீகமற்றதோ முரட்டுத்தனமானதோ அல்ல, மாறாக, அம்மக்கள், இறைவனையும் அவரது படைப்பையும் தங்களது அகவாழ்வில் ஏற்பதால் கிடைக்கும் அகமகிழ்ச்சியோடு ஒன்றாகக் கலந்திருப்பது என்று கூறினார் திருத்தந்தை.
இந்த உலகம் துன்பங்களால் நிறைந்துள்ளவேளை, இந்த நமது மகிழ்ச்சி குறித்து சிலர் கேள்வி எழுப்பலாம், ஆனால், மகிழ்ச்சியைப் புறக்கணிப்பது யாருக்கும் நன்மையைப் பெற்றுத் தராது மற்றும் உலகையும் இருளில் ஆழ்த்தும் என்றும் திருத்தந்தை உரையாற்றினார்.
தனது தாயக மக்கள், இந்த மகிழ்ச்சியை பிறருக்கு வழங்கவும், தீமையைப் புறக்கணித்து, அமைதி மற்றும் ஒப்புரவின் பணியாளர்களாக வாழவும் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்து இம்மக்களை அழைத்து வந்த Munich மற்றும் Frising பேராயர் கர்தினால் Reinhard Marx அவர்களுக்கும், அவ்வுயர்மறைமாவட்டத்தின் முன்னாள் கர்தினால் Wetter அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவராக வத்திக்கான் வருவதற்கு முன்னர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Munich மற்றும் Frising உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.