2012-08-04 15:02:52

இலங்கையில் சில முன்னேற்றம், ஆனால் தேவைகள் பல : ஐ.நா.அதிகாரி


ஆக.04,2012. இலங்கையில் 4 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ. நா. அதிகாரி John Ging தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இலங்கையில் போர் முடிந்த மூன்று ஆண்டுகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற, ஐ.நா.வின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்(OCHA) இயக்குனர் John Ging இவ்வாறு கூறியுள்ளார்.
போருக்குப் பின்னானக் காலகட்டத்தைப் பல நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும், மீளக் குடியேறியவர்களின் நிலையும் அதேபோன்று மோசமாகவே உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் John Ging கூறினார்.
வடகிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு அரசால் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அதிகமான உதவிகள் தேவைப்படுகின்றன என அவர் மேலும் கூறுகிறார்.
"பன்னாட்டு நிதியுதவிகள் 80 விழுக்காடு குறைந்துள்ளது மக்களை துன்பத்துக்குள் தள்ளியிருக்கிறது" என்றும் John Ging கூறினார்.







All the contents on this site are copyrighted ©.