2012-08-03 16:25:25

திருத்தந்தை : சமயத்தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டும்


ஆக.03,2012. சமயத்தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டியது தற்போதைய சமூகத்திற்கு மிக முக்கியம் என்று, ஜப்பானின் Hiei மலையில் நடைபெற்று வரும் உலக அமைதிக்கான 25வது பல்சமய செபக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Kyotoவுக்கு வடகிழக்கிலுள்ள Hiei மலையில் ஜப்பானின் Tendai புத்தமதப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் உலக அமைதிக்கானச் பல்சமய செபக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் கலந்து கொள்ளும் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் செயலர் பேராயர் Pier Luigi Celata, இக்கூட்டத்திற்கெனத் திருத்தந்தை வழங்கிய தந்திச்செய்தியை வாசித்தார்.
1986ம் ஆண்டில் இத்தாலியின் அசிசியில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க உலக அமைதிக்கான பல்சமய செபக்கூட்டத்தின் உணர்வில் தற்போது Hiei மலையில் நடைபெற்று வரும் உலக அமைதிக்கானச் செபக் கூட்டம் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சமயத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இயற்கைப் பேரிடர்கள் சமயத்தில் சமயத் தலைவர்களின் பங்கேற்பு குறித்து இக்கருத்தரங்கில் கலந்து பேசப்படுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடந்த ஆண்டு வடகிழக்கு ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடும் விளைவுகளைத் தான் நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, Tendai புத்தமதப் பிரிவின் தலைமைக்குரு Kojun HANDAவுக்கு அனுப்பியுள்ளார்.
பேராயர் Pier Luigi Celata , கடந்த ஜூலை 31ம் தேதியிலிருந்து இம்மாதம் 11ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.







All the contents on this site are copyrighted ©.