2012-08-02 15:45:48

ஹிட்லர் அரசால் கொல்லப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான Roma மக்களின் நினைவாக இலண்டன் நகரில் நினைவு கூட்டம்


ஆக.02,2012. இலண்டன் நகரின் Hyde பூங்காவில் உள்ள இனவேள்வி நினைவுச் சின்னத்தின் முன் ஆகஸ்ட் 3, இவ்வெள்ளியன்று நினைவு நிகழ்வொன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது, பல்வேறு இனங்களை அழிக்கும் செயல்பாடுகளில் ஹிட்லரின் ஜெர்மனி ஈடுபட்டிருந்தது. அழிக்கப்பட்ட இனங்களில் ஒன்று Roma என்றழைக்கப்படும் நாடோடி இனத்தவர்.
இவ்வினத்தைச் சேர்ந்த 500,000க்கும் அதிகமானோர் நச்சுவாயு அறைகளில் கொல்லப்பட்டனர். இவர்களின் இறுதிக் குழுவாக நச்சுவாயு அறைகளுக்கு 3000 பெண்களும் சிறுவர், சிறுமியரும் 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் அரசால் கொல்லப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான Roma மக்களின் நினைவாக நடத்தப்படும் இந்த நினைவு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் நாட்சி வதை முகாம்களில் இருந்தவர்கள் அணிந்திருந்த அடையாள அட்டைகளைப் போன்ற அட்டைகளை அணிந்து, இறந்தோரின் நினைவாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை சமர்ப்பணம் செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Roma மக்கள் அன்று உடலளவில் கொல்லப்பட்டனர். இன்றும், இந்த மக்கள் ஊடகங்களால் தவறான வழிகளில் சித்தரிக்கப்பட்டு, மனதளவில் கொல்லப்படுகின்றனர். ஊடகங்கள் தரும் தவறான செய்திகளால் Roma மக்களுக்கு எதிராக மக்கள் காட்டும் பகைமை உணர்வு இன்று பெருமளவில் வளர்ந்துள்ளது என்று இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.