2012-08-02 15:40:30

பன்னாட்டுச் சமுதாயத்தின் மனிதாபிமான உதவிகள் சிரியாவுக்கு மிக, மிக அவசியமாக உள்ளது - திருப்பீடத் தூதர்


ஆக.02,2012. சிரியாவில் நடைபெறும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கு துன்புறும் மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மூவேளை செப உரையில் கூறியது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது என்று சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவில் நிலவி வரும் சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், பன்னாட்டுச் சமுதாயத்தின் மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்கு மிக, மிக அவசியமாக உள்ளது என்றும், பேராயர் செனாரி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அண்மையில் இலண்டன் மாநகரில் துவங்கிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகளாவிய ஒன்றிப்பை எடுத்துக்காட்டும் ஓர் அடையாளமாக இருந்தாலும், அதற்கு நேர்மாறான ஒரு நிலையை சிரியாவில் வாழும் மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று பேராயர் செனாரி சுட்டிக்காட்டினார்.
எவ்விதச் சுழல்காற்றிலும் அணையாமல் எரியும் ஒலிம்பிக் சுடர் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்பது நம்பிக்கையைத் தருவதைப் போல், பல்வேறு முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களும் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தளராமல் காக்கவேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் செனாரி வேண்டுகோள் விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.