2012-08-02 15:37:08

டில்லியில் தலித் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட போராட்ட ஊர்வலம்


ஆக.02,2012. அரசின் சலுகைகளைப் பெறும் இந்து தலித் மக்களுடன் கிறிஸ்தவர்களையும் இந்திய அரசு இணைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் தங்களுக்கு உண்டு என்று இந்திய ஆயர் பேரவையின் தலித் உரிமைகள் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை தேவ சகாயராஜ் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாது, தலைநகர் டில்லியில் 3000 க்கும் அதிகமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இப்புதனன்று மேற்கொண்ட ஒரு போராட்ட ஊர்வலத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை சகாயராஜ் இவ்வாறு கூறினார்.
தற்போது நடைபெற்றுவரும் மழைக்கால பாராளுமன்ற அமர்வின்போது தலித் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கும் வண்ணம் அரசின் சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார் அருள்தந்தை சகாயராஜ்.இதுவரைத் தாமதம் செய்துவந்துள்ள மத்திய அரசு, இனியும் தாமதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றினால், நாடுதழுவிய போராட்டங்களைத் தலித் மக்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அருள்தந்தை சகாயராஜ் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.