2012-08-02 15:48:35

கெய்ரோவுக்கருகே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே மோதல்


ஆக.02,2012. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 40 கி.மி. தெற்கே உள்ள Dahshur என்ற கிராமத்தில், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே இப்புதனன்று உருவான ஒரு மோதலில் பல கிறிஸ்தவ வீடுகளும், கடைகளும் தீக்கிரையாயின.
ஜூலை 27 அன்று காப்டிக் ரீதி கத்தோலிக்கர் ஒருவருக்கும், இஸ்லாமியர் ஒருவருக்கும் ஒரு கடையில் ஏற்பட்ட மோதல் இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்ததெனக் கூறப்படுகிறது.
இந்தக் கலவரங்களால் அப்பகுதியில் வாழும் 100க்கும் அதிகமான காப்டிக் ரீதி கத்தோலிக்கக் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த மோதலில் 16 பேர் காயமுற்றனர் என்றும், கிறிஸ்தவக் கோவில் ஒன்றும் தீக்கு இரையாகும் சூழல் உருவானது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்லாமிய வன்முறை கும்பல் ஒன்று கிறிஸ்தவக் கோவிலைத் தாக்கச் சென்றபோது, அங்கிருந்த இஸ்லாமியக் குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியைத் தடுத்தன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
எகிப்தின் அரசுத் தலைவராக Mohammed Morsi பொறுப்பேற்றபின் நிகழும் முதல் வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.