2012-08-02 15:38:26

ஆடுகள் மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர்களாக திருஅவையின் ஆயர்கள் பணியாற்றவேண்டும் - திருப்பீடச் செயலர்


ஆக.02,2012. இயேசு நற்செய்தியில் கூறியிருப்பதுபோல், கூலி பெறுவதற்காக வேலை செய்யும் மேய்ப்பர்களாக இல்லாமல், ஆடுகள் மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர்களாக திருஅவையின் ஆயர்கள் பணியாற்றவேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார்.
ஜூலை 2, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் Vercelliயின் புனித Eusebius அவர்களின் திருநாளையொட்டி, அப்பகுதியில் உள்ள Introd என்ற பங்குக் கோவிலில் திருப்பலியாற்றிய கர்தினால் பெர்தோனே தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
Vercelliயின் ஆயராக இருந்த புனித Eusebius, தேவைகள் எங்கெங்கு எழுந்ததோ அங்கெல்லாம் சென்று நற்செய்தியைப் பரப்பினார் என்று கூறிய கர்தினால் பெர்தோனே, இந்தக் கடினமான பயணங்களில் புனிதர் காட்டிய பொறுமையும், விடாமுயற்சியும் நமக்குப் பாடமாக அமைகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
கடவுளை மறந்துவரும் நமது இன்றைய உலகில் மனிதர்கள் தங்களையே புரிந்துகொள்ளாமல் வாழ்வது ஆபத்து என்றும், இந்த ஆபத்தை நீக்க அவர்கள் மீண்டும் இறைவனைத் தேடிவருவதே சிறந்த வழி என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Caritas in veritate என்ற சுற்றுமடலில் கூறியுள்ளதை கர்தினால் பெர்தோனே தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
வருகிற அக்டோபர் மாதம் திருத்தந்தை அவர்களால் துவக்கிவைக்கப்படும் விசுவாச ஆண்டு, நமது இன்றையச் சூழலில் இறைவன் நமக்கு வகுத்துள்ள திட்டங்களை கண்டறிய மற்றொரு முக்கியத் தருணமாக அமையவேண்டும் என்று கர்தினால் பெர்தோனே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.