2012-08-01 15:49:50

மனித வர்த்தகத்தைத் தடைசெய்ய கிறிஸ்தவ அமைப்புக்களின் ஒலிம்பிக் முயற்சிகள்


ஆக.01,2012. உலகில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் மனித வர்த்தகத்தைத் தடைசெய்யும் வண்ணம், இப்பிரச்சனை மீது மக்களின் கவனத்தைத் திருப்பும் வண்ணம், பல கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்து இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
மனித வர்த்தகத்தைத் தடுக்க ஐ.நா. எடுத்துவரும் ஒரு முயற்சியான STOP THE TRAFFIK மற்றும் UN.GIFT என்ற திட்டத்துடன் கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்துள்ளன.
UN.GIFT என்ற கருத்துடன் 10 அடி உயரத்திற்கு பரிசுப் பெட்டிகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பெரும் பெட்டிகள் Westminster Abbey, இங்கிலாந்தின் மிகப் பழமையான கோவில் என்று கருதப்படும் Southwark பேராலயம், புனித பவுல் பேராலயம் ஆகிய புகழ்பெற்ற கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டிகளுக்குள் மனித வர்த்தகம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன. இவற்றைக் காண்பவர்கள் அதிர்ச்சியுடன் பெட்டிகளை விட்டு வெளியேறுவதைக் காண முடிகிறது என்று இந்த முயற்சியில் உதவும் தன்னார்வத் தொண்டர் காத்தரின் கூறினார்.
பரிசுப் பொருட்களைப் போல் மனிதர்களை ஈர்த்து, அவர்களை வர்த்தகமாக்கும் அநீதிகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று இத்திட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான James Parker கூறினார்.








All the contents on this site are copyrighted ©.