2012-08-01 16:07:22

பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெத்லகேமில் மனநல உதவி மையம்


ஆக.01,2012. இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனப் பகுதியில் வாழும் குழந்தைகளின் மனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அக்குழந்தைகளுக்குத் தேவையான மனநல உதவிகள் கிடைப்பதில்லை என்று மனநல உதவியாளர் Ursula Mukarker கூறினார்.
பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண்மணி Ursula Mukarker, ஜெர்மன் நாட்டின் Wings of Hope என்ற ஓர் அமைப்புடன் இணைந்து பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெத்லகேமில் மனநல உதவி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவுகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வரும் பாலஸ்தீன குழந்தைகள் பல உள்மனக் காயங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறும் Ursula Mukarker, மனநல உதவிகளைத் தேடுவது அம்மக்களிடையே ஒரு குறையாகக் கருதப்படுவதால், பெரும்பாலான குழந்தைகளுக்கு இவ்வுதவிகளைத் தருவதற்குப் பெற்றோர் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.
இந்தத் தவறான எண்ணங்களைத் தகர்த்து, பாலஸ்தீனியக் குழந்தைகள் நல்ல மனனலத்துடன் வளர்வதற்கு உதவிகள் செய்வதே தன் வாழ்வின் இலக்கு என்று Ursula Mukarker, CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பாலஸ்தீனப் பகுதியில் 700,000 குழந்தைகளுக்கு மனநல உதவிகள் தேவைப்படுவதாக, Palestine Trauma Center என்ற மையத்தால் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.