2012-08-01 15:46:14

அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்


ஆக.01,2012. அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டுக்கு எழுபது நாட்களுக்கும் குறைவாக உள்ள இந்நிலையில், விசுவாச ஆண்டில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளின் பாட்டியல் ஒன்றை திருப்பீடம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நினைவாக, அக்டோபர் மாதம் 11ம் தேதி, வியாழனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் நடைபெறும் ஒரு மாபெரும் கூட்டுத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவுபெறும்.
அக்டோபர் 7ம் தேதி முதல் 28ம் தேதி முடிய "கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைக்க, நற்செய்தி அறிவிப்பில் புதிய வழிகள்" என்ற மையக்கருத்துடன் 13வது ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திகானில் நடைபெறும்.
இந்த மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுடனும், இன்னும் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் தலைவர்களுடனும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அக்டோபர் மாதம் 11ம் தேதி இந்த மாபெரும் கூட்டுத் திருப்பலியை நிகழ்த்துவார்.
அக்டோபர் மாதம் 21ம் தேதி ஆறு மறைசாட்சிகளை புனிதர் நிலைக்குத் திருத்தந்தை உயர்த்துவதும், 2013ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளும் இவ்விசுவாச ஆண்டின் உச்சகட்டங்களாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.