2012-07-31 16:27:53

வெளியிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களால் சிரியாவில் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது - அனைத்துலக காரித்தாஸ்


ஜூலை,31,2012. வெளிநாடுகளிலிருந்து சிரியாவுக்குள் ஆயுதங்கள் கொண்டுவரப்படுவது அந்நாட்டின் தற்போதைய நிலைமையை மேலும் மோசமான நிலைக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்று அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர் Michel Roy கவலை தெரிவித்தார்.
தற்போது சிரியாவில் போர் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றது என்றும், புரட்சியாளர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் வெளியிலிருந்து வழங்கப்படும் ஆயுதங்களால் இந்தப் போர் மேலும் தீவிரமடைந்து வருகின்றது என்றும் Michel Roy கூறினார்.
சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு இந்த வழியைப் பின்பற்றக் கூடாது என்றும் கூறிய அவர், சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறை, வருகிற செப்டம்பரில் திருத்தந்தை லெபனன் நாட்டுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் இரத்து செய்யப்படுவதற்குக் காரணமாக அமையக்கூடுமோ என்ற கவலை இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தப் போர், ஏற்கனவே லெபனன் நாட்டின் வடபகுதியில் சுன்னி பிரிவினருக்கும் Alawites இசுலாம் பிரிவினருக்கும் இடையே பரவியுள்ளது என்றுரைக்கும் Michel Roy, இப்போது தொடங்கியுள்ள இந்தப் போர் வெகு எளிதாக முடியும் எனத் தான் கருதவில்லை எனவும் தெரிவித்தார்.
சிரியா நாட்டு அகதிகளுக்குத் தற்போது உணவு, உறைவிடம் மற்றும் மருந்துப் பொருள்களைக் கொடுத்து உதவி வரும் அரசு-சாரா அமைப்புக்களில் அனைத்துலக காரித்தாஸ் பெரிய அமைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது.







All the contents on this site are copyrighted ©.