2012-07-31 16:19:20

தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் முதல் தேதி புதுடெல்லியில் மாபெரும் பேரணி


ஜூலை,31,2012. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் முதல் தேதி இப்புதன்கிழமையன்று புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் காலை 9 மணிக்கு மாபெரும் போராட்டமும் பேரணியும் நடைபெறும் என்று இந்திய ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் செங்கல்பட்டு ஆயர் நீதிநாதன் அவர்கள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கறுப்பு தினமாக”க் கடைப்பிடிக்கப்படும் ஆகஸ்ட் 10ம் தேதியன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வகைகளில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற ஒரு மக்களாட்சி நாட்டில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து போராட வேண்டியிருக்கின்றது, எனவே வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரத்தை அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் நீதிநாதன்.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சலுகைகள் மறுக்கப்படும் பகுதி 1950ம் ஆண்டின் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 10ம் தேதியாகும். இந்நாள் “கறுப்பு தினமாக”க் கடைப்பிடிக்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.