2012-07-30 16:18:05

வாரம் ஓர் அலசல் - சிந்தாமல் சிதறாமல்.... (எதிலும் எப்பொழுதும் கவனம்)


ஜூலை,30,2012. RealAudioMP3 அன்று இரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இருவர் எதிர் எதிரே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது கையை எதார்த்தமாக வெளியே நீட்ட அவரது கையிலிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் கழன்று கீழே விழுந்து விட்டது. கடிகாரம் விழுந்தவுடன் அந்த மனிதர் வேதனைப்பட்டு துடித்துப்போய் விட்டார். ஆனால் அவர் எதிரில் அமர்ந்திருந்த ஆள் அதைப்பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை. உடன் இருந்தவர்களுக்கு அவரது செயல் வியப்பாக இருந்தது. வண்டி அடுத்த இரயில் நிலையத்தில் வந்து நின்றது. அமைதியாக அமர்ந்திருந்த அந்த ஆள் இரயில்வே அதிகாரியை அழைத்து, இரயில்பாதையில் அந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் எந்தத் தந்திக்கம்பத்தின் அருகே விழுந்தது என்பதைக் கூறி எதிரே இருந்தவரின் முகவரிக்கு அந்த கைக்கடிகாரத்தை அனுப்பி விடுமாறு கூறினார். இப்படி மற்றவர்கள் பதட்டமடைந்த நேரத்தில் நிதானமாக, அது எங்கு விழுந்தது என்று கவனித்துச், செய்ய வேண்டியதைச் செய்த மாமனிதர் வேறு யாருமல்ல, நம்ம ஊர் மூதறிஞர் இராஜாஜிதான் அவர். அன்பு நேயர்களே, நமது வாழ்க்கையில் எங்கும் எதிலும் எப்பொழுதும் சிந்தாமல் சிதறாமல் செயல்படுவதற்குத் தேவைப்படுவது கவனம். அதிலும், அவசரம் அவசரமாகப் பரபரவென உண்டு உறங்கி உடுத்தி அலுவலகம் செல்லும் இன்றையக் கணணித் தொழிநுட்பத் தலைமுறைகளுக்கு இது அதிகமாகவே தேவைப்படுகின்றது. இதனை ஏன் சொல்கிறோம் என்றால் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேளுங்கள், காரணம் புரியும்.
பொதுவாக பிள்ளைகள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, பெற்றோர்கள் அவர்களிடம், தம்பி சாலையில் வண்டியைக் கவனமாக ஓட்டு, தெருவில் போகும்போது அங்குமிங்கும் வேடிக்கை பார்க்காமல் எதிரே வரும் வண்டிகளைப் பார்த்துப் போ என்று அறிவுரை சொல்லி அனுப்புவார்கள். ஏனெனில் இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதில் முதல் ஆபத்தான நகரம் சென்னை எனவும், கடந்த மே மாதத்தில் மட்டும் அண்ணா நகர் பகுதியில் 136 சிறு சாலை விபத்துகள், 17 கனரக வாகன மோதல்கள் மற்றும் 4 உடல் உறுப்புகள் சேதமடைந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன எனவும், 2011ம் ஆண்டில் சென்னையில் மாத்திரம் 9 ஆயிரத்து 845 சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன எனவும், தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 ஆயிரத்து 184 பேர் பலியாகியுள்ளனர் எனவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. டில்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில், இத்திங்கள் அதிகாலை 04:30 மணியளவில் நெல்லூரைத் தாண்டிய சிறிது நேரத்துக்குள் அந்த இரயிலில் 11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் உடல் கருகி சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
காலையில் பொட்டு வைத்துப் பூச்சூடியபின் பள்ளி செல்ல மறுத்து அழுத தன் குழந்தையின் கையில் ஒற்றை ரூபாயைக் கொடுத்து 'தின்பண்டம் வாங்கிக் கொள்' மகளே என்று சமாதானம் செய்து வழியனுப்பிய தாய் ஒருவர், அன்று மாலையே தன் பாசமகளின் உயிரற்ற நெற்றியில் அந்த ஒற்றை ரூபாயை வைத்து அழுத நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரத்தில் சென்னையில் நடந்துள்ளது. சென்னை சேலையூர் இந்திரா நகரிலுள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ருதி என்ற 6 வயதுச் சிறுமி, பள்ளிப் பேருந்தில் 60 மாணவிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்திலிருந்த ஓட்டை வழியாகத் தவறிக் கீழே விழுந்தாள். பேருந்தின் பின்சக்கரம் ஸ்ருதி மீது ஏறி இறங்க, சிறுமி அவ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். சிறுமி ஸ்ருதி விழுந்ததைக் கண்டு பேருந்துக்குள்ளிலிருந்த மாணவிகள் கூச்சல் போட்டுள்ளனர். இதைக் கவனிக்காமல் ஓட்டுனர் வேகமாகப் பேருந்தை ஓட்டியிருக்கிறார். ஓர் ஓட்டுனரின் கவனக்குறைவு, அந்தப் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்றதன்மை நாளைய நம்பிக்கைத் தலைமுறையில் ஓர் உயிரை இன்று பறித்து விட்டது. தனது பிள்ளைகளுக்கு நல்ல ஓர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கனவில், மூன்று சக்கர வாகனம் ஓட்டிப் பிழைப்பு நடத்தும் ஸ்ருதியின் தந்தைக்கும் தாய்க்கும் எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்வது? “பள்ளிகள் குழந்தைகளின் வாழ்வாதாரம். அவர்களே நாட்டின் எதிர்காலம்” என்பது படிக்காத மேதை காமராஜர் அவர்களின் கூற்று. 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி நடந்த கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளித் தீ விபத்து ஒன்று மட்டும் போதாதா இக்காலப் படித்த மேதைகளுக்குப் பாடம் சொல்லித்தர? 94 குழந்தைகள் அல்லவா இறந்தார்கள் அத்தீ விபத்தில்!. ஜூலை 16-ம் தேதியை ஆண்டுதோறும் பள்ளிக்கூட பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்க மத்திய அரசு அப்போது எடுத்த நடவடிக்கை என்னவாயிற்று!. கொலைகளைச் செய்துவிட்டு, கவனக்குறைவு விபத்து என்று காரணம் கூறி, அரசும், பள்ளி நிர்வாகமும் இழப்பீடு என்ற பெயரில் சில இலட்சங்களை அள்ளித்தரும் அவலம் நாட்டில் இருக்கும்வரை கவனக்குறைவால் விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகளும் நிற்கப்போவது இல்லை. இத்திங்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் விபத்துக்குக்கூட, இதில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாயும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என இரயில்வே அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள். அதாவது நாட்டில் சுமார் 44 கோடிக் குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் ஒரு நாட்டில், மிக மோசமாகச் சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்பது சமூக ஆர்வலர் ஒருவரின் ஆதங்கம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜலீல்பூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கினர். பஞ்சாப் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் 200 ரூபாய் செலுத்த முடியாத ஓர் ஏழைப் பெற்றோர் தங்களது பிறந்த பெண் குழந்தையைப் பலி கொடுத்தனர். இவையிரண்டும் கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள். உரோம் நகரின் மருத்துவமனை ஒன்றில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு சலைன் ஏற்றுவதற்குப் பதிலாக ஊசி மூலம் செயற்கைப் பால் செலுத்தியதால் அக்குழந்தை இறந்துள்ளது. அடுத்து, கடவுச்சீட்டு, விமானப் பயணச்சீட்டு, விமான இருக்கைஎண் கொண்ட சீட்டு ஆகிய இவை எதுவுமே இல்லாமல் கடந்த புதன்கிழமையன்று 11 வயது பிரித்தானியச் சிறுவன் ஒருவன், இங்கிலாந்தின் மான்செஸ்டரிலிருந்து இத்தாலி வந்துள்ளான். இதற்கு யாருடைய கவனக்குறைவு காரணம்?... இப்படி விடை தெரியாத கேள்விகள் தொடருகின்றன.
சுமார் 4 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் (சுமார் 27மில்லியன் பவுண்டுகள்) செலவில் கடந்த வெள்ளிக்கிழமை வெகு ஆடரம்பமாகத் தொடங்கியுள்ளது இலண்டன் ஒலிம்பிக்ஸ். இதில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிருக்கான 10 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில், 103.9 புள்ளிகள் எடுத்து Guo Wenjun என்பவர் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அன்பு நேயர்களே, இந்த விளையாட்டு வீரர்கள் பதக்கங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு கவனமுடன் விளையாடுகிறார்கள். இவர்களது வாழ்க்கை இலட்சியமே இதற்குக் காரணம். ஆனால் வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளுமின்றி போதைப்பொருளிலும், மதுபானக் கடைகளிலும் உழைப்பை அடகு வைப்போரால், அவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளதற்கு மதுபானக் கடைகள்தான் முக்கிய காரணம் என்றும், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 65 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர் என்றும் ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அலைபேசிகள், ஃபேஸ்புக், டிவிட்டர், வீடியோ கேம்ஸ் போன்றவைகளும் இளம்தலைமுறைகளின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.
எனவே நல்லதொரு வாழ்க்கை அமைவதற்கு, எங்கும் எதிலும் கவனமாகச் செயல்படுவது எல்லாருக்கும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அந்த உணவு விடுதியில் உளவியல் நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் அருகிலிருந்த நண்பரிடம், “மனிதர் ஒவ்வொருவரும் இயந்திரம் போல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் (Conditioned man) வாழ்கிறார்கள்” என்று இரஷ்ய மெய்யியல் அறிஞர் Ivan Petrovich Pavlov சொன்னார் என்றார். “இதில் எனக்கு உடன்பாடில்லை” என்று அடுத்தவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஒருவர் கூடை நிறைய கோழி முட்டைகளோடு அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அந்த மனிதர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற படைவீரர். அவரைப் பார்த்து வில்லியம் ஜேம்ஸ், “கவனம், நிமிர்ந்து நில்!” என்று உரக்கக் கத்தினார். உடனே அந்த முன்னாள் படைவீரர் சட்டென்று விரைத்து நின்றார். கூடை கீழே விழுந்தது. முட்டைகள் சிதறி ஓடின. எவன்டா இப்படிச் சொன்னது? எனக் கடும் கோபமாகக் கத்தினார் படைவீரர். “நான்தான்” என்றார் வில்லியம் ஜேம்ஸ். இது நியாயமா? என்று படைவீரர் கேட்க, “சத்தம் போட்டது நாங்கள்தான். ஆனால் எங்கள் சொல்படி நீர் நடக்க வேண்டுமென்று நாங்கள் சொல்லவில்லையே” என்றார் வில்லியம் ஜேம்ஸ். அதற்குப் படைவீரர், “நில் என்றால் நிற்க வேண்டியது. போ என்றால் போக வேண்டியது. இதுதான் இராணுவத்தில் 25 ஆண்டுகளாக எங்கள் பழக்கம்” என்று சொல்லிவிட்டு உடையாமல் தப்பித்த சில முட்டைகளை பொறுக்கத் தொடங்கினார். வில்லியம் ஜேம்ஸ் சொன்னார் : “மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருக்கிற அழகான வாழ்க்கை அநியாயமாகக் கீழே விழுந்து சிதறிக் கொண்டிருக்கின்றது” என்று.
சிதறிக் கொண்டிருக்கும் அழகான மனித வாழ்க்கை எதிலும் எப்பொழுதும் சிந்தாமல் சிதறாமல் இருப்பதற்கு மனிதருக்குச் சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். மனதை அங்குமிங்கும் அலையவிடாமல் செய்யும் பணியில் ஈடுபாட்டுடன் செய்தால் கவனம் சிதறாது. ஒலிம்பிக்ஸ் போட்டியாளர்கள் போன்று வாழ்க்கையின் இலக்குத் தெளிவாக இருக்க வேண்டும். அன்பு நேயர்களே, உங்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என இப்போது கேட்டால் இதுதான் எனது இலட்சியம் என உடனடியாக உங்களால் சொல்ல முடியுமா?. செல்லும் பாதை தெளிவாக இருந்தால் அதில் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அது பிறர்நலனில் அக்கறை கொண்டதாய், தன்னலமற்றதாயும் இருக்கும். இல்லாவிடில் பல இளம் ஸ்ருதிகளைக் காவு கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இந்தப் பரபரப்பான உலகில் கவனத்தை ஒருநிலைப்படுத்த தினமும் 10 நிமிட மூச்சுப் பயிற்சி, குறைந்தது அரைமணி நேர தியானம் செய்தல் மிகவும் உதவியாக இருக்கும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு.







All the contents on this site are copyrighted ©.