2012-07-30 16:37:48

இயேசு சபை கல்வியாளர்களுக்கு அருள்தந்தை லொம்பார்தியின் உரை


ஜூலை,30,2012. இன்றைய நவீன உலகில் விசுவாசப்பணி என்பது நீதிக்கான அர்ப்பணம், மற்றும் நாம் வாழும் மக்களிடையே கலாச்சார, பாரம்பரிய மற்றும் மத அனுபவங்களுடன் ஆன பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதாக உள்ளது என இயேசு சபை கல்வியாளர்களுக்கு உரையாற்றினார் அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இயேசு சபை கல்வி நிறுவனங்கள் தங்கள் பணி நோக்கத்திற்கு விசுவாசமாக இருப்பது குறித்து இடம்பெறும் அனைத்து நாடுகளின் இயேசு சபை கல்விக் கருத்தரங்கில் பங்குபெறுவோருக்கு உரை வழங்கிய, இயேசு சபையின் நான்கு உயர்மட்ட துணைத் தலைவர்களுள் ஒருவரான அருள்தந்தை லொம்பார்தி, இயேசு சபையின் 35வது பொது அவை ஒப்புரவின் தேவை குறித்து வலியுறுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.
புதிய நற்செய்தி அறிவித்தல், கல்விக்கான அவசரத்தேவை, தலைமுறை இடைவெளி, விசுவாசமும் பகுத்தறிவும், பொருளாதாரமும் சமூக நீதியும் போன்ற தலைப்புகளில் தன் கருத்துக்களை வழங்கிய அவர், இயேசு சபையின் முன்னாள் அதிபர்கள் அருள்தந்தையர்கள் அருப்பே மற்றும் கோல்வன்பாக் ஆகியோர் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ள கருத்துக்களையும் மேற்கோள் காட்டினார்.
புதியத் தகவல் தொழில்நுட்பத் துறையால் பலம் பெற்றிருக்கும் இன்றைய கல்வித்துறையின் உதவியுடன் மனித உறவுகளை ஆழப்படுத்தும் நோக்குடன் இளையோரிடையே பணியாற்றவேண்டிய அவசியத்தையும் இயேசுசபை கல்வியாளர்களிடம் வலியுறுத்தினார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.