2012-07-28 13:29:00

ஜூலை 22,2012 - பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 நான் துறவற வாழ்வில் சேர்ந்த புதிதில், பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று அருள்பணிக்குச் செல்வது. சனிக்கிழமை மதியம் நவதுறவு இல்லத்திலிருந்து இருவர் இருவராகச் சைக்கிளில் கிளம்புவோம். அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று, சிறுவர், சிறுமியருக்கு மறைகல்வி பாடங்கள் நடத்துவோம். ஞாயிறு திருப்பலிக்கென பாடல்கள் சொல்லித்தருவோம். இந்த அருள்பணி அனுபவம் பெரும்பாலும் மகிழ்வான ஓர் அனுபவமாக இருந்தது.
சனிக்கிழமை காலையிலேயே மனதில் பரபரப்பு தோன்றும். இந்த பரபரப்புக்குக் காரணங்கள் பல உண்டு. வாரம் முழுவதும் துறவு இல்லத்திலேயே இருப்பதால், வார இறுதியில் வெளி உலகைப் பார்க்கும் வாய்ப்பு, சைக்கிள் பயணம், கிராமங்களில் மக்கள் தரும் அன்பான உபசரிப்பு, குழந்தைகள் 'அண்ணா, அண்ணா' என்று கூப்பிட்ட பாசம், பங்குத்தந்தை இல்லத்தில் கிடைத்த வேறுபட்ட உணவு... இப்படி பல காரணங்கள்.
நவதுறவு இல்லத்திற்குத் திரும்பியபின், இந்த நினைவுகளை மீண்டும் நான் அசைபோட்டு, நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்ததுண்டு. இந்த அனுபவங்கள் வெறும் மேலோட்டமான மகிழ்ச்சியாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, துறவு இல்லத்தில் அவ்வப்போது இந்த அருள்பணி அனுபவங்களை மதிப்பிடும் நேரங்களும் இருந்தன. ஆர்ப்பாட்டமாக, ஆரவாரமாகச் செய்த அருள்பணியை அமைதியில் அசைபோட்டபோது பல தெளிவுகள் பிறந்தன, பாடங்களைக் கற்றுக்கொண்டேன். பணிகள் செய்வதோடு நிறுத்திவிடாமல், மீண்டும் அவைகளை அமைதியில் சிந்திக்கவும், குழுவில் மதிப்பிடவும் துறவு வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த அந்தப் பழக்கத்திற்காக நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மதிப்பீடுகள் செய்யும் வழிமுறைகள் அனைத்து பெரும் நிறுவனங்களிலும் நடத்தப்படுகின்றன என்பதை பின்னர் அறிந்தபோது இன்னும் மகிழ்வாக இருந்தது.

என் அருள்பணி அனுபவத்தை இன்று நான் அசைபோடக் காரணம்... இன்றைய நற்செய்தி. இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கென இருவர் இருவராக அனுப்பியதை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியை நாம் சிந்திக்கிறோம். இதோ இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்:
மாற்கு நற்செய்தி 6: 30-31
அக்காலத்தில், திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
தங்கள் அருள்பணியில் நிகழ்ந்தவற்றை, ஆர்வத்துடன், பரபரப்புடன் பகிர்ந்துகொண்ட சீடர்களுக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் ஏமாற்றத்தைத் தந்திருக்க வேண்டும். 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'

மேலோட்டமாகப் பார்க்கும்போது, இயேசுவின் இந்தக் கட்டளை போருத்தமற்றதாகத் தெரிகிறது. மக்கள் மத்தியில் அட்டகாசமாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களைப் பாலைநிலத்திற்குப் போகச் சொன்னதற்குப்பதில், "சீடர்களே, பிரமாதம், இன்னும் பல இடங்களுக்குச் சென்று போதியுங்கள், அருஞ்செயல்களை ஆற்றுங்கள்" என்று இயேசு உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்க வேண்டாமா?
தன்னலம் மிக்க ஒரு சராசரித் தலைவன் தன்னுடைய சீடர்களுக்கு இவ்விதக் கட்டளையைத் தந்திருப்பார். சராசரித் தலைவனுக்குத் தேவையானதெல்லாம், அவரது கொள்கைகள், அவரது பெயர் மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் ஒலிக்கவேண்டும். இந்தச் சுயநலத் தேவைக்காக தன் தொண்டர்களைத் தலைவன் பயன்படுத்திக் கொள்வார். தொண்டர்களை இவ்விதம் பயன்படுத்தி, தன் தேவைகள் நிறைவடைந்ததும், அவர்களைத் தூக்கி எறியும் எத்தனைத் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம்?

தங்கள் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் தலைவர்களைப்போல், தவறாக வழிநடத்தும் போலியான மேய்ப்பர்களைப்பற்றியும், அவர்களை இறைவன் எவ்விதம் தண்டிப்பார் என்பதைப்பற்றியும் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தெளிவாகக் கூறுகிறார். போலி மேய்ப்பர்களைத் தண்டிப்பதாகக் கூறும் இறைவன், ஆடுகளைப் பேணிக்காக்கும் நல்ல மேய்ப்பர்களை அனுப்புவதாகவும் வாக்களிக்கிறார். இந்த வாக்குறுதியின் உச்சகட்டமாக இறைவன் அனுப்பியவரே இயேசு. அந்த நல்ல ஆயன் தன் சீடர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பதை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
நல்லாயன் இயேசுவுக்கு, தன் பணிகளும், கொள்கைகளும் முக்கியம்தான். ஆனால், அதே வேளை, அப்பணிகளைச் செய்யும் சீடர்களும் மிகவும் முக்கியம். பணி செய்துத் திரும்பியுள்ள சீடர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்கும்படி பணிக்கிறார் இயேசு.

உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துயிர் தரும் மருந்து ஓய்வு. உடல் ஓய்வெடுக்கும் நேரத்தில் நமது உள்ளம் விழித்தெழுந்து, நாம் செய்த வேலைகளை, நமது அன்றைய நாளை அலசிப்பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது, அல்லது வாய்ப்புக்களை உருவாக்கிக்கொண்டு வாழ்வை அலசிப்பார்ப்பது பல வழிகளில் பயனளிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த அலசலுக்கு நேரம் ஒதுக்கினால், பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இதைத்தான் புனித லொயோலா இஞ்ஞாசியார் தன் ஆன்மீகப் பயிற்சிகளில் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.

புனித இஞ்ஞாசியார் கற்றுக்கொடுத்த ஆன்மீகப் பயிற்சிகளில் ஒரு முக்கியக் கூறு... ஒவ்வொரு நாளும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை ஒதுக்கி, அந்நாளைப் பற்றிய ஆன்மீகத்தேடலை மேற்கொள்வது. 'ஆன்மீக ஆய்வு' என்ற இந்த பயிற்சிக்குப் புனித இஞ்ஞாசியார் தலையாய இடம் கொடுத்திருந்தார். ஒரு நாளில் தியானம், செபம் என்ற மற்ற ஆன்மீக முயற்சிகளில் ஈடுபட ஒருவருக்கு நேரம் இல்லை என்றாலும், ஆன்மீக ஆய்வுக்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். துறவு வாழ்வில் நுழைந்தபோது இந்தப் பயிற்சியின் ஆழம் எனக்கு அதிகம் விளங்கவில்லை. ஆனால், வயதில் வளர, வளர, அறிவு தெளிய, தெளிய இந்த பயிற்சியின் ஆழம் எனக்குப் புரிந்தது. புனித இஞ்ஞாசியார் கற்றுத்தந்த இந்த ஆன்மீக ஆய்வு, துறவு வாழ்வில் உள்ளவர்கள் மட்டும் பின்பற்றும் வழிமுறை அல்ல. நம் அனைவருக்குமே தேவையான ஒரு சிறந்த பாடம்.

காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கப் போகும்வரை, பல நூறு வேலைகளால் நமது நாள் நிறைந்துவிடுகிறது. இவற்றில், மேலோட்டமாகச் செய்யும் பணிகள், முழு ஈடுபாட்டுடன் செய்யும் பணிகள் என்று பலவகைப் பணிகள். ‘இராக்கெட்’ வேகத்தில் மிகத் துரிதமாக இயங்கும் இவ்வுலகில், உண்பது, குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, உறங்குவது போன்ற தனிப்பட்டத் தேவைகளை நிறைவேற்றினோமா என்ற கேள்வி பல நாட்கள் நமக்குள் எழும் அளவுக்கு நாம் வேகமாகச் செல்கிறோம்.
அதேபோல், நமது குடும்ப உறவுகளுக்குத் தேவையான நேரமும் ஈடுபாடும் தருகிறோமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இப்படி இயந்திரமாக இயங்கும் நாம், ஒவ்வொரு நாளும் பத்து, பதினைத்து நிமிடங்கள் அமைதியில் அமர்ந்து, அந்த நாளைச் சீர்தூக்கிப் பார்த்தால், தெளிவுகள் பல பிறக்கும். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் உருவானால், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய இந்த ஆன்மீக ஆய்வு பயன்தரும். நம்முடைய நலனுக்காக, இறைவனுடன் நாம் செலவிடும் இந்த சில மணித்துளிகள் நிச்சயம் பயனளிக்கும்.

மின்காந்தத் திறனை உலகறியச் செய்த Michael Faraday, ஒரு முறை அறிவியல் வல்லுனர்கள் கூட்டமொன்றில் ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார். அந்த ஒரு மணி நேரமும் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அம்மேதை சொன்ன கருத்துக்களில் ஆழ்ந்திருந்தனர். ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அவரது உரை முடிந்ததும், அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பினர். இங்கிலாந்து அரசனான ஏழாம் எட்வர்ட் அப்போது Walesன் இளவரசராக இருந்தார். அவரும் அக்கூட்டத்தில் பங்கேற்று, அறிவியல் மேதை Faradayஐப் புகழ்ந்தார். கரவொலி மீண்டும் அரங்கத்தை நிறைத்தது. திடீரென, அரங்கத்தில் அமைதி நிலவியது. ஏனெனில், மேதை Faraday அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றார். அரங்கத்திற்கு அருகில் இருந்த ஒரு கோவிலில் அப்போது நண்பகல் செபத்திற்காக மணி ஒலித்திருந்தது. இளவரசர், இன்னும் பிற அறிவியல் வல்லுனர்கள் தன்னைச் சுற்றியிருந்தாலும், Faraday அந்த நேரத்தை இறைவனுக்கென ஒதுக்கியதால், கூட்டத்திலிருந்து, புகழ் மழையிலிருந்து விலகி, இறைவனை நாடிச்சென்றார். நம் அனைவருக்கும் தேவையான ஒரு பாடம் இது.
என்னதான், பணிகள் இருந்தாலும், எவ்வளவுதான் பேரும் புகழும் நம்மைச் சூழ்ந்திருந்தாலும் இறைவனைத் தேடிச்செல்லும் நேரங்கள் நம் ஒவ்வொரு நாள் வாழ்விலும் இருந்தால், இன்னும் நாம் உயர்வடைய வழியுண்டு. 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று தன் சீடர்களிடம் இயேசு கூறியதன் பொருளை ஓரளவு உணர்ந்திருப்போம் என்று நம்புகிறேன்.

பாலைநிலத்தில், தனிமையைத் தேடிச்செல்வது அங்கேயேத் தங்குவதற்கு அல்ல, மாறாக, தனிமையில் பெற்ற இறை அனுபவத்தை, வாழ்வைப்பற்றி தனிமையில் அறிந்துகொண்ட தெளிவுகளை மீண்டும் மக்களிடம் பகிர்ந்துகொள்ளவே அந்தத் தனிமை. இதை நமக்குச் சொல்லித்தருகிறது இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி. பாலை நிலத்திற்கு இயேசுவும், மற்ற சீடர்களும் சென்றுள்ளனர் என்பதை அறிந்துகொண்ட மக்கள் அங்கும் அவர்களைத் தேடிச்சென்றனர். இவ்வாறு தேடிச்சென்ற மக்கள் மேற்கொண்ட முயற்சிகளை மாற்கு நற்செய்தி அழகாக விவரிக்கிறது:
மாற்கு நற்செய்தி 6: 33
திருத்தூதர்களும், இயேசுவும் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.

நகரங்களிலிருந்து பாலைநிலத்திற்கு மக்கள் வந்தனர் என்ற பகுதி நகரத்தையும், பாலைநிலத்தையும் இணைத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. திசைகாட்டும் அடையாளங்கள், வழிகாட்டும் அடையாளங்கள் நகரங்களில் மலிந்துகிடக்கும். ஆனால், நகரங்களில் நம்மைத் திசைத்திருப்ப, நாம் வழிதவறிச் செல்லத் தூண்டும் பலர் இருப்பார்கள். இயேசுவின் காலத்திலும் இஸ்ரயேல் நகரங்களில் தவறான வழிகாட்டிய போலி மேய்ப்பர்கள் பலர் இருந்தனர். இவர்களின் தவறான வழிகாட்டுதலால் சலித்துப்போன மக்கள், தங்களைச் சரியான வழியில் நடத்தும் இயேசுவைத் தேடி நகரங்களைவிட்டு, பாலை நிலத்திற்குச் சென்றனர். பாலை நிலமென்றும் பாராமல், தங்களைத் தேடி வந்த மக்களைக் கண்டதும் இயேசு நடந்துகொண்டது நமக்கு மீண்டும் ஒரு பாடமாக அமைகிறது.
மாற்கு நற்செய்தி 6: 34
இயேசு கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. பணிகளில் மூழ்கியதால், உண்ணவும் நேரமின்றி தவித்த சீடர்களுடன் பாலை நிலத்தை நாடிச் சென்ற இயேசு, அங்கும் மக்கள் தங்களைத் தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்ததும், தனது தேவைகள், தன் சீடர்களின் தேவைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத் துவக்கினார் என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.
இரண்டு சிந்தனைகளை இன்று நாம் மனதில் ஆழமாகப் பதிப்போம். வேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்க முயல்வோம். நமது தேவைகளுக்காக ஒதுக்கும் நேரங்களிலும் அடுத்தவர் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்தால், நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.