2012-07-28 15:10:20

இலண்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒலிம்பிக் குழுக்களுக்கு வரவேற்பு


ஜூலை,28,2012. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்க்கையில் உண்மை, நன்மைத்தனம், திறமைகளை நிறைவு செய்தல் ஆகியவற்றைத் தேடும் பயணியாகவே இறுதியில் இருக்கிறார், இந்தப் பயணம் உண்மையாகவே வாழப்படும்போது இது மற்றவரோடு உரையாடலுக்கானப் பாதையைத் திறக்கின்றது என்று இலண்டன் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
ஒவ்வொரு மனிதரும் அமைதியின் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டியிருப்பதால் இந்த உரையாடலில் யாரையும் ஒதுக்கக் கூடாது என்றும் பேராயர் நிக்கோல்ஸ் கூறினார்.
இலண்டனில் இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள 30வது ஒலிம்பிக்சில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை வரவேற்பதற்கென பேராயர் நிக்கோல்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் உணர்வில் அமைதி மற்றும் ஒப்புரவுக்கான முயற்சிகளில் எல்லா மதத்தினரும் ஈடுபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் அத்தலைவர்கள்.
மேலும், அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஒலிம்பிக்ஸ் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஐ.நா.பொது அவையின் தீர்மானத்தையும் அவ்வறிக்கைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா.பொதுச்செயலரும் அமைதி, உரையாடல், வளர்ச்சி, ஒப்புரவு ஆகியவற்றை இந்த ஒலிம்பிக்ஸ் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.