2012-07-28 15:14:05

அருள்தந்தை லொம்பார்தி : ஒலிம்பிக்ஸ் “தங்கத்தைவிட”


ஜூலை,28,2012. “ஒலிம்பிக் போர்நிறுத்தம்” குறித்து தொன்மைகால மரபில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது போல, இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இலண்டன் ஒலிம்பிக்ஸ் அனைத்துலக சமுதாயத்துக்கு அமைதியைக் கொண்டு வருவதாய் இருக்கட்டும் என்று வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் உடல் அழகைப் பார்த்து வியக்கும் அதேவேளை, மனித உடலானது, மனம், விருப்பம், அதனுள் இருக்கும் ஆர்வம் ஆகியவற்றால் பயிற்சிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம் என்றும் கூறினார் அவர்.
இதனால், ஒலிம்பிக்ஸை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுடன் இணைத்திருப்பது சரியானதே என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வத்திக்கான் வானொலியில் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, ஒலிம்பிக்ஸ் சூழல் மற்றும் ஆர்வத்தில் இறையாட்சியை ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் ஆர்வத்தில், 1992ம் ஆண்டு பார்செலோனா விளையாட்டுக்களுக்குப் பின்னர் இவாஞ்சலிக்கல், பாப்பிடிஸ்ட், மெத்தோடிஸ்ட், எப்பிஸ்கோப்பல் ஆகிய கிறிஸ்தவ சபைகள் “தங்கத்தைவிட” என்ற புதிய முயற்சியில் ஈடுபட்டன, இவ்வாண்டு பிரிட்டன் கத்தோலிக்கத் திருஅவையும் இந்த முயற்சியில் இணைந்தது என்றும் கூறினார்.
இவ்வெள்ளிக்கிழமை காலை இலண்டனிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஒரேநேரத்தில் மணிகளை ஒலித்து ஒலிம்பிக் வீரர்களுக்குத் தங்களது வரவேற்பை தெரிவித்தன என்றும் வார நிகழ்ச்சியில் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.