2012-07-25 13:59:36

கவிதைக்கனவுகள் - பத்திரகிரியார் பாடல்கள் - மெய்ஞ்ஞானப் புலம்பல்


ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? 4

பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்? 8

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்? 14

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்? 34

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்? 47

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்? 54

நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்? 62

அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்? 63

நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்? 112

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்? 118

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்? 158

என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்? 159







All the contents on this site are copyrighted ©.