2012-07-24 16:07:03

மருந்துக்கு கட்டுப்படாத HIV தொற்று அதிகரிக்கிறது


ஜூலை,24,2012. கிழக்கு ஆப்பிரிக்காவில் மருந்துக்கு கட்டுப்படாத HIV நோய்க்கிருமிகள் வேகமாக அதிகரித்துவருவதாக உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு எச்சரித்துள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனமும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியும் இணைந்து செய்த ஆய்வின்படி கிழக்கு ஆப்ரிக்காவில் HIV நோய்க்கிருமியானது மருந்துக்கு கட்டுப்படாத தன்மையை அடைந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் HIV நோய்க்கிருமிகள் பரவியவர்களில் சுமார் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே மருந்துக்கு கட்டுப்படாத தன்மை காணப்படுகின்றது.
ஆனால் கிழக்கு ஆப்ரிக்காவில் இத்தகையவர்கள் 29 விழுக்காடாக இருப்பதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இது ஆண்டுக்கு ஆண்டு வேகமாக அதிரித்துக் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்நிலை நீடித்தால் கடந்த பத்து ஆண்டுகளாக எய்ட்ஸ் மரணங்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலைமை மாறி, மீண்டும் எய்ட்ஸ் மரணங்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.







All the contents on this site are copyrighted ©.