2012-07-24 16:01:13

கத்தோலிக்கர் தங்கள் உடல்களை இறைவனின் மகிமைக்காகப் பயன்படுத்துமாறு பிரிட்டன், அயர்லாந்து ஆயர்கள் வலியுறுத்தல்


ஜூலை,24,2012. கத்தோலிக்கர் தங்கள் உடல்களை “இறைவனின் மகிமை”க்காகப் பயன்படுத்துமாறு வாழ்வு தினச் செய்தியில் வலியுறுத்தியுள்ளனர் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து ஆயர்கள்.
இவ்வெள்ளிக்கிழமையன்று ஒலிம்பிக்ஸ் மற்றும் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி மாற்றுத்திறனாளிக்களுக்கான ஒலிம்பிக்ஸ் இலண்டனில் தொடங்கவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அறநெறி விழுமியங்களோடு நலமாக வாழ்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2012” தொடங்கவிருக்கும் இவ்வேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் உணர்வுகளுடன், எதிலும் சமநிலை காக்கும் ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வதற்கு உதவும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருப்பதாகவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்திலும் வேல்சிலும் ஜூலை 29, வருகிற ஞாயிறன்று வாழ்வு தினம் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.
இவ்வாண்டின் இத்தினம், ஒவ்வொருவரும் நமது உடலை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது என்று பேராயர் பீட்டர் ஸ்மித் கூறினார். இவர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஆணையத் தலைவர்.







All the contents on this site are copyrighted ©.