2012-07-24 15:57:55

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்குச் செபமும் நல்வாழ்த்தும் : இந்திய ஆயர் பேரவைத் தலைவர்


ஜூலை,24,2012. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் பிரணாப் முகர்ஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, வாழ்வுக் கலாச்சாரம், அமைதி, நல்லிணக்கம், உரையாடல், பொதுவாழ்வில் ஒருங்கமைவு ஆகிய விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
இப்புதன்கிழமையன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு கர்தினால் Gracias அனுப்பியுள்ள நல்வாழ்த்துக் கடிதத்தில், நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் மறைப்பணியின் முக்கிய கூறுகளைக் குறிப்பிட்டுள்ளதோடு, நாட்டைக் கட்டியெழுப்புவதில் இந்தியத் திருஅவைக்கும் அரசுக்கும் இடையே இடம்பெற்று வரும் ஒத்துழைப்பு தொடர்ந்து இடம்பெறுமாறும் கேட்டுள்ளார்.
நாட்டின் 13வது குடியரசுத் தலைவருக்கு இந்தியத் திருஅவையின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், பிரணாப் முகர்ஜி அவர்களின் இந்தத் தேர்தல் முடிவைத் தாங்கள் வரவேற்பதாகவும், புதிய அரசுத்தலைவர் மற்றும் நாட்டின்மீது இறையாசிர் நிரம்பப் பொழியப்படுமாறு செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார் மும்பை பேராயர் கர்தினால் Gracias.
பிரணாப் முகர்ஜி அவர்கள், ஆழமான அரசியல் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டவர் மற்றும் நாட்டின் பொதுநலன்மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias.
இந்தியாவில் சுமார் 60 விழுக்காட்டுக் கத்தோலிக்கப் பள்ளிகள் கிராமங்களில் உள்ளன.
76 வயதான பிரணாப் முகர்ஜி அவர்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.