2012-07-23 15:49:39

வாரம் ஓர் அலசல் - உலகின் தீபாவளி


ஜூலை,23,2012. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 69 விழுக்காட்டு வாக்குகளுடன் இவர் வெற்றி பெற்ற செய்தி வெளியானவுடனே இவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒரே தீபாவளிக் கொண்டாட்டம்தான். 76 வயதான பிரணாப் முகர்ஜி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவருக்கு வத்திக்கான் வானொலியின் தமிழ்க் குடும்பமும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது. பிரணாப் முகர்ஜி அவர்கள் வருகிற புதன்கிழமையன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். அன்பர்களே, இலண்டன் மாநகரமும் ஓர் அனைத்துலகத் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக இந்நாள்களில் தீவிரத் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இலண்டனில் வருகிற வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் 30வது அனைத்துலக கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களை உலகின் தீபாவளி என்றுதான் சில ஊடகங்கள் வருணித்துள்ளன. அந்த அளவுக்கு கண்ணைக்கவரும் வண்ணக் கலைநிகழ்ச்சிகளுடன் இந்த ஒலிம்பிக் திருவிழா களைகட்டவிருக்கின்றதாம். இம்மாதம் 27 முதல் வருகிற ஆகஸ்ட் 12 வரை நடைபெறவிருக்கும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கு மூன்றாவது முறையாக இலண்டன் தேர்ந்தெடுக்கப்பட்ட 2005ம் ஆண்டில் தொடங்கிய விழாக் கொண்டாட்டம், இவ்வெள்ளியன்று உச்சக்கட்டத்தை அடையவிருக்கின்றது. 1908 மற்றும் 1948ம் ஆண்டுகளில் இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டனில் நடைபெற்றுள்ளன. 2012ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளும் வருகிற ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 9 வரை இலண்டனில் நடைபெறவுள்ளன.
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பது 200க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் ஓர் அனைத்துலக நிகழ்வாகும். இவை முதலில் கிரீஸ் நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் (Olympia) கி.மு.776ம் ஆண்டில் தொடங்கியது. ஆயினும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களை கி.பி.393ம் ஆண்டில் முதல் கிறிஸ்தவ உரோமைப் பேரரசர் முதலாம் Theodosius தடை செய்தார். பின்னர் Panagiotis Soutsos என்ற கிரேக்க கவிஞர் கி.பி.1833ம் ஆண்டில் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" (Dialogue of the Dead) என்னும் கவிதை, இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தைத் தூண்டியது. “உனது திரையரங்குகளும் பளிங்குச் சிலைகளும் எங்கே? உனது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எங்கே?” என கிரேக்க தத்துவமேதை பிளேட்டோவின் ஆவி தனது கிரேக்க நாட்டைப் பார்த்துக் கேட்பது போன்ற வரிகள் அக்கவிதையில் உள்ளன. இதனால் தூண்டுதல் பெற்ற கிரேக்க நாட்டு மானிடவியலாளர் Evangelis Vasileiou Zappas என்பவர், இவ்விளையாட்டுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தார். இவை தடை செய்யப்பட்ட 1460 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்களைத் தோற்றுவித்தவர் என்ற பெருமையைப் பெறுபவர் Zappas. இவர் 1865ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி இறந்த போது தனது பெருமளவானச் சொத்துக்களை நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கென எழுதி வைத்தார். Pierre de Coubertin என்ற ப்ரெஞ்ச் நாட்டவர் அனைத்துலக ஒலிம்பிக் குழுவை 1894ம் ஆண்டில் நிறுவினார். அன்றிலிருந்து இக்குழு அனைத்துலக ஒலிம்பிக்கின் நிர்வாக அமைப்பாக மாறி, ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான விதிமுறைகளையும உருவாக்கியது. Pierre de Coubertin நவீன ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். Zappas எழுதிய உயிலின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1896ம் ஆண்டில் முதன்முறையாக ஏத்தென்சில் நடத்தப்பட்டன. வருகிற வெள்ளிக்கிழமையன்று 30வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டனில் தொடங்கவுள்ளன.
“ஒரு தலைமுறைக்குத் தூண்டுதல் கொடு” (Inspire a Generation) என்ற “பஞ்ச்” வசனத்துடன் தயாரிப்பு வேலைகளைச் செய்து வருகிறது இலண்டன் ஒலிம்பிக் குழு. பிரான்சின் பாரிசிலுள்ள உலக அதிசயமான ஈஃபிள் கோபுரம் போலவே இலண்டனில் ஒரு வித்தியாசமான ஒலிம்பிக் கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 376 அடி உயரத்தில் 455 வளைவான படிக்கட்டுகளுடன் அமைந்திருக்கும் இந்தச் சுருள் வடிவ 'ஒலிம்பிக் கோபுரத்தை இந்திய ஓவியர் அனீஷ் கபூர் வடிவமைத்திருக்கிறார். இலண்டனின் 200 பழமையானப் பாரம்பரியக் கட்டிடங்களை இடித்து விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தை அமைத்திருக்கிறார்கள். இந்த விளையாட்டுக்கள் மற்றும்பிற நிகழ்ச்சிகளில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான மொத்தச் செலவு 900 கோடி பவுண்டுகளுக்கும் மேற்பட்டதென மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலத்தில் விளையாட்டு மைதானங்கள் வன்முறைக் களங்களாகப் பல நேரங்களில் மாறி வருகின்றன. விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் போட்டிகளும் சூதாட்டங்களும் சண்டைகளும் குண்டுவீச்சுகளும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் விளையாட்டுக்கள், மக்கள் மத்தியில் சகோதர அன்பையும் அமைதியையும் ஊக்குவிக்க வேண்டும். இதைத்தான் கத்தோலிக்கத் திருஅவை வலியுறுத்தி வருகிறது. பிரிட்டன் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனமான CAFOD கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட ஒரு செய்தியில், “இலண்டன் ஒலிம்பிக்கின்போது இளையோர் அமைதியின் கருவிகளாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டது. இதற்காக இணையதளத்தில் அமைதியை ஊக்குவிக்கும் ஒலி-ஒளிப் படங்களையும், வசனங்களையும் பதிவு செய்யுமாறும்” பரிந்துரைத்தது. இந்த இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் RealAudioMP3 , “ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகினர் மத்தியில் சகோதரத்துவத்தின் உண்மையான அனுபவத்தைக் கொணரட்டும்; உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவித்து அவற்றின் கனிகளைத் தரட்டும்; பல நாடுகளின் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கின்றது ஒலிம்பிக்ஸ்; எனவே இது ஓர் உறுதியான அடையாள விழுமியத்தைக் கொண்டுள்ளது; இதனாலே கத்தோலிக்கத் திருஅவை இதனை அன்போடும் கவனத்தோடும் நோக்கி வருகின்றது” என்று கூறினார்.
Pinocchio என்ற ப்ரெஞ்ச் கவிஞர் சொல்வார் : “நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். உன் வாழ்வில் இலட்சிய ஒளி ஒளிரட்டும்” என்று. நமது வாழ்க்கையில் இலட்சிய ஒளி சுடர்விட வேண்டுமெனில் உயர்வான விழுமியங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெளிப்பட வேண்டும். 'சோம்பியிருத்தல் மரணத்தை விளைவிக்கும்' என்ற தடித்த எழுத்துக்களுடன் கடந்த புதனன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது. புகைப்பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்குச் சமமாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களின் இறப்புக்குக் காரணமாக உள்ளது என்று புதிய மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளதாம். "The Lancet" என்ற மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளைச் செய்தால், உலகில் ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகளைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.
பொதுவாக விளையாட்டுக்களில் நல்ல உடற்பயிற்சி கிடைக்கும். அதேநேரம் மனஅழுத்தங்கள் அகலும். அதனால் உடலுக்கும் மனதுக்கும் நல்ல சுகம் கிடைக்கும். அத்துடன் நல்ல பண்புகளும் வளரும். மனதும் அமைதி பெறும். ஒருவரின் நல்ல விழுமியங்களும் வெளிப்படும். ஒருவரின் குணநலனைக் கண்டுபிடிப்பதற்கு அவர் விளையாடும் திடலுக்குச் செல் என்பார்கள். எந்த ஒரு விழுமியமுமே நமது வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். ஒருசமயம் சீடர்கள் குருவிடம் சென்று, “குருவே, சாட்சிய வாழ்வின் மாபெரும் விழுமியம் பற்றி நீர் ஒருபோதும் எம்மிடம் பேசியதில்லை, அது ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குரு, “ஒரு படமானது, ஆயிரம் சொற்களைவிட மதிப்புமிக்கது. வாழுகின்ற மனிதர் இலட்சக்கணக்கான படங்களைவிட மதிப்புமிக்கவர். எனவே உங்களில் இருக்கும் அந்த மேலானதை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள். அப்போது இந்த உலகம் காண்பதற்கு ஆவலோடு காத்திருக்கும் இறைவனின் மகிமைக்கு நீங்கள் நம்பத்தகுந்த சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார். ஆம். ஓர் உண்மையான சான்றுக்கு வார்த்தைகளோ, அடையாளமோ, அறிகுறியோ தேவையில்லை. இந்த மூன்றின் வழியாக ஒருவர் இறைவனின் ஒளியை ஒளிரச் செய்ய வேண்டும்.
இப்படி ஒளிரச் செய்தால் பட்டாசுகளைக் கொளுத்தும் விழா நாள்கள் மட்டுமல்ல, எல்லா நாள்களுமே உலகத்திற்குத் தீபாவளிதான். ஒலிம்பிக் சுடர்ப்பந்தங்கள் உயரிய விழுமியங்களை உலகினர் மத்தியில் ஏற்றி வைக்கட்டும். உலகினர் மத்தியில் சகோதரத்துவ உணர்வையும் அமைதியையும் வளர்க்கட்டும். ஒலிம்பிக் காலத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவதையும் புறக்கணித்து சிரியாவில் தினமும் குண்டு வெடிப்புகள்தான், உயிர்ச்சேதங்கள்தான். சிரியாவின் இரண்டு பெரிய நகரங்களான Damascus மற்றும் Aleppo வில் கடும் சண்டை இடம்பெற்று வருவதாக இஞ்ஞாயிறு செய்திகள் கூறின. நார்வே நாட்டு Oslo விலும், Utoeya தீவிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பின் ஓராண்டு நினைவு இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 77 பேர் இறந்தனர். 242 பேர் காயமடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வர் நகர் திரையரங்கில் நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் இறந்தனர் மற்றும் 58 பேர் காயமுற்றனர். இந்த வன்முறையை அறிவற்ற கொடுஞ்செயல் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கண்டித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
RealAudioMP3 எனவே அன்பு நெஞ்சங்களே, விழாக்களில் ஒளிரும் பட்டாசுகளாக இல்லாமல் அவற்றை கொளுத்தும் கருவிகளாக நாம் வாழ்வோம். ஒருவர் மேலே உயருவதற்கும் கீழே தாழ்வதற்கும் அவரது செயலே காரணம் என்பதால் நாம் ஒவ்வொருவரும் நமது நடவடிக்கைகளைச் செம்மைப்படுத்துவோம். நாம் வாழும் இடங்களில் சகோதர அன்பையும் அமைதியையும் ஏற்படுத்துவோம். இதனையே ஒலிம்பிக் விளையாட்டுக்களும் வெளிக்கொணரட்டும். அப்போது ஒலிம்பிக்ஸ், உலகின் உண்மையான தீபாவளியாக அமையும்.







All the contents on this site are copyrighted ©.