2012-07-23 15:37:10

'வடக்கில் குடியரசு இல்லை' : அமெரிக்கத் தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்


ஜூலை,23,2012. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவதாக யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிமை மீறல், ஆட்கடத்தல், தாக்குதல், கொலை, போர், மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படாமை, குடியரசு ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு முட்டுக்கட்டைகள் போன்ற குடியரசு விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அமெரிக்க தூதரிடம் எடுத்துக்கூறியதாக யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம் தெரிவித்தார்.
இலங்கையில் தமது பணியை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது இவ்விருவரிடையேயான சந்திப்பு இடம்பெற்றது.
இனப்பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றபோதிலும், அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, போருக்குப் பிந்திய அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்ற மாயையில் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும் அமெரிக்க தூதர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்ப்பாண ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.