2012-07-23 15:29:50

டென்வர் நகர் திரையரங்கு வன்முறை, அறிவற்ற கொடுஞ்செயல் : திருத்தந்தை


ஜூலை,23,2012. இலண்டனில் வருகிற வெள்ளிக்கிழமையன்று தொடங்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, “ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகினர் மத்தியில் சகோதரத்துவத்தின் உண்மையான அனுபவத்தைக் கொணரட்டும்; உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவித்து அவற்றின் கனிகளைத் தரட்டும்; பல நாடுகளின் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இது இருக்கின்றது; எனவே இது ஓர் உறுதியான அடையாள விழுமியத்தைக் கொண்டுள்ளது; இதனாலே கத்தோலிக்கத் திருஅவை இதனை அன்போடும் கவனத்தோடும் நோக்கி வருகின்றது” என்று கூறினார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வர் நகர் அவ்ரோரா திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டத் துப்பாக்கிச்சூட்டு வன்முறை அறிவற்ற கொடுஞ்செயல் எனவும், இச்செயதி கேட்டுத் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறிய திருத்தந்தை, டான்சானிய நாட்டு ஜான்சிபாருக்கு அருகில் படகு கவிழ்ந்து பலர் உயிரிழந்த நிகழ்வு குறித்தும் கவலை தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அவ்ரோரா திரையரங்கு வன்முறையில் 12 பேர் இறந்தனர் மற்றும் 58 பேர் காயமுற்றனர். ஜான்சிபார் படகு விபத்தில் 68 பேர் இறந்துள்ளனர். பலர் காணாமற்போயுள்ளனர். இவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.