2012-07-23 15:32:55

ஆயனுக்குத் தேவையான அடிப்படை குணம், கருணை - வத்திக்கான் அதிகாரி


ஜூலை,23,2012. ஆயனுக்குத் தேவையான அடிப்படை குணம் கருணை என்பதை இயேசுவின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளலாம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் ஒருவார மேய்ப்புப் பணி பயணத்தைக் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவரான கர்தினால் Fernando Filoni, கடந்த புதனன்று துவக்கினார்.
இப்பயணத்தின் ஓர் உச்சகட்டமாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் மேமாதம் நியமனம் பெற்ற நான்கு ஆயர்களை கர்தினால் Filoni இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்தினார்.
ஐந்து மணி நேரம் நிகழ்ந்த இந்தத் திருநிலைபடுத்தும் நிகழ்வில் மறையுரையாற்றிய கர்தினால் Filoni, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஆப்ரிக்க நாடுகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்துலகக் கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஒளிவிளக்காகத் திகழும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டு நம் அனைவருக்குமே புத்துணர்வும், புதிய விசுவாச வாழ்வும் வழங்கும் ஒரு தருணமாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார் கர்தினால் Filoni.
இத்திருநிலைப்பாட்டு நிகழ்வில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத் தலைவர், பிரதமர், நகர மேயர் உட்பட பல உயர் நிலை அரசு அதிகாரிகளும், மத்திய ஆப்ரிக்கத் திருஅவையின் அனைத்து ஆயர்களும், இன்னும் France, Cameroon, Chad, Ghana, ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயர்களும் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.