2012-07-23 15:45:14

Congo ஆயர்கள் தலைமையில் 'நம்பிக்கையின் ஊர்வலம்'


ஜூலை,23,2012. நாட்டைப் பிரிவினையிலிருந்து காப்பாற்றும் நோக்கிலான 'நம்பிக்கைகையின் ஊர்வலம்' ஒன்றிற்கு ஏற்பாடுச் செய்துள்ளனர் Congo நாட்டு ஆயர்கள்.
Congo நாடு பிரிவினைகளை நோக்கிச் செல்லாமல் ஒன்றிப்பில் நிலைத்திருக்க அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வந்து, ஆகஸ்ட் மாதம் முதல் தேதி இடம்பெற உள்ள இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.
இம்மாதம் முப்பதாம் தேதி, நாட்டின் ஒவ்வொரு கோவிலிலும் துவங்க உள்ள அமைதி மற்றும் ஒன்றிப்பிற்கான செபத்தில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள ஆயர்கள், உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் இந்நாட்களில் சிறப்பு நிதி திரட்டல் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.
Congo ஜனநாயக குடியரசின் இன்றைய உண்மையான நிலைகள் குறித்து சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள உதவும் நோக்கில், ஐக்கிய நாட்டு சபை, ஐரோப்பிய ஐக்கிய அவை மற்றும் ஆப்ரிக்க அவை ஆகியவைகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தங்கள் திட்டங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அதேவேளை, Congo நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும், இன்றைய துன்பகரமான சூழல்களிலும் நம்பிக்கையை இழக்காமல் அமைதிக்காக உழைக்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார் Congo ஆயர் பேரவை தலைவர் ஆயர் Nicolas Djomo.
இதற்கிடையே, Congoவைச் சுற்றியுள்ளப் பகுதியின் அமைதி வாய்ப்புகள் குறித்து Congo, Rwanda, Burundi மற்றும் Uganda நாடுகளின் ஆயர்களும் அந்நாடுகளின் கிறிஸ்தவ மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளும் இத்திங்களன்று கென்யாவின் நைரோபியில் கூடி விவாதித்தனர்.








All the contents on this site are copyrighted ©.