2012-07-20 16:00:57

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணத்துக்கு மத்திய கிழக்கில் தயாரிப்பு


ஜூலை,20,2012. வருகிற செப்டம்பர் 14ம் தேதியன்று லெபனன் நாட்டுக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வதற்குத் தயாரிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் தொடர் செபத்தில் ஈடுபடவுள்ளனர் என்று இத்திருப்பயண ஒருங்கிணைப்பாளர் அருட்பணி Marwan Tabet அறிவித்தார்.
திருத்தந்தையின் இத்திருப்பயணத் தயாரிப்பு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த இவர், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் இத்திருப்பயணத்தை மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் பதட்டநிலைகள், போர்கள், சிலசமயங்களில் சமய அடக்குமுறைகள் போன்றவற்றால் நாடுகளைவிட்டு வெளியேறுவதற்குச் சோதிக்கப்படும் இளையோரும் திருத்தந்தையின் உரையைக் கேட்பதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று அருட்பணி Tabet கூறினார்.
வருகிற ஆகஸ்டிலிருந்து செப்டம்பர் 14 வரை மாரத்தான் தொடர் செபங்கள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்குத் திருஅவைகளுக்கென 2010ம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர் மாமன்றத் தீர்மானங்கள் கொண்ட அப்போஸ்தலிக்க ஏட்டை வெளியிடுவதற்காக லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.