2012-07-19 16:20:24

குருத்துவப் பயிற்சி என்பது ஏட்டளவு கல்வி இல்லை - வத்திக்கான் அதிகாரி


ஜூலை,19,2012. குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோருக்குக் கல்வி கற்பிப்பது வெறும் தகவல் பரிமாற்றமாய் மட்டும் இருக்கக்கூடாது, மாறாக, பயிற்றுவிப்போரின் வாழ்வும் குரு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டுமென்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவரான கர்தினால் Fernando Filoni, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் ஒருவார மெய்ப்புப் பணி பயணத்தை இப்புதனன்று துவக்கினார். இவ்வியாழன் காலை புனித மார்க் குருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய கர்தினால் Filoni, குருத்துவப் பயிற்சி என்பது ஏட்டளவு கல்வி இல்லை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
45 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் கர்தினால் Filoni மேற்கொண்டுள்ள இப்பயணத்தின்போது, அவர் அந்நாட்டு அரசுத் தலைவரையும் ஏனைய அரசு அதிகாரிகளையும் ஜூலை 20, இவ்வெள்ளியன்று சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்பின்னர், அந்நாட்டில் உள்ள பங்குத்தளங்களையும், கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் பல்வேறு குழந்தைகள் காப்பங்கங்களையும் கர்தினால் பார்வையிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜூலை 22, வருகிற ஞாயிறன்று கர்தினால் Filoni அவர்களால் அந்நாட்டின் புதிய நான்கு ஆயர்கள் திருநிலைப்படுத்தப்படுவர். இந்த நான்கு ஆயர்களும் இவ்வாண்டு மேமாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமனம் பெற்றவர்கள்.








All the contents on this site are copyrighted ©.