2012-07-19 16:33:34

எந்த வயதிலும் எவரெஸ்ட் ஏறலாம்: ஜப்பான் பெண்மணி தமாய் வடானாபே


ஜூலை,19,2012. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த தமேய் வடானாபே (Tamae Watanabe). இவர் சிகரத்தின் உச்சியை தொட்ட போது இவரது வயது 73 ஆண்டுகளும், 180 நாட்களுமாகும்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவரான தமேய், சிறு வயது முதலே கடுமையான உழைப்பாளியாவார். அதிகாலை எழுந்து அப்பாவுடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் ஆண்களுக்கு நிகரான வேலைகளை அசராமல் பார்த்துவிட்டு, பிறகு ஆறு கிலோமீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு நடந்தே போய் படித்துவிட்டு திரும்புவார்.
பள்ளியொன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது முதன் முதலாக ஒரு சிறு மலைமீது ஏறும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது அவருக்கு வயது 27. வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற பியூஜி மலையேறும் குழுவினருக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நிலையில்தான் தமேய்க்கு எவரெஸ்ட் சிகரம் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவருக்கு வயது 62.
சாதனை புரிய நினைப்பவர்களின் உச்சகட்ட சாதனையாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட வயதானவர் என்ற சாதனையை தனது 62 வயதில் ஏற்படுத்திய தமேய், தன் சாதனையைத் தானே முறியடிக்கும் வகையில் 11 ஆண்டுகள் கழித்து அண்மையில் தனது 73வது வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டுத் திரும்பியுள்ளார்.
இச்சாதனை தனக்கு மகிழ்வைத் தந்தாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மலை மிகவும் மாறிவிட்டதாக வேதனையும் படுகிறார் தமேய்.
முன்பு பனி படர்ந்து இருந்த இடங்கள் எல்லாம், இப்போது நீர் நிலையாக நீண்டு காணப்படுகிறது. இது உலகம் வேகமாக வெப்பமயமாகி வருவதன் அறிகுறியே, இதனை தடுத்து நிறுத்திட நிறைய விழிப்புணர்வு தேவை அது இளைஞர்களிடம் இன்னும் தேவை, ஏனெனில் இனி உலகம் அவர்களின் கையில், அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முன்வரவேண்டும் என்கிறார் தமேய் வடானாபே.








All the contents on this site are copyrighted ©.