2012-07-18 16:56:58

வத்திக்கான் வானொலியின் வரலாறு


இத்தாலி நாட்டுத் தலைநகரான உரோமையிலே ஒரு குட்டி நாடாகச் செயல்படுவது வத்திக்கான். இதன் தலைமையகத்தைத் தவிர உரோமையிலே இன்னும் சில இடங்களிலும் இதற்கு அசையா சொத்துகள் உள்ளன. அவற்றில் ஒன்றில்தான் வத்திக்கான் வானொலியின் தலைமையகம் இயங்குகின்றது. இயேசுவின் நற்செய்தியும் மானிட நட்பும் ஒன்றாகக் கலந்ததன் விளைவே வத்திக்கான் வானொலி. இது ஒரு கத்தோலிக்க வானொலிச் சேவை. திருத்தந்தையின் வானொலி. திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் குலியெல்மோ மார்க்கோனியும் நண்பர்கள். இத்திருத்தந்தை பணியேற்றதும் தமது செய்தி பாரெங்கும் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். இதற்கென வானொலி ஒன்றை வடிவமைக்குமாறு தனது நண்பர் மார்க்கோனியைக் கேட்டார். அப்போதுதான் வானொலியைக் கண்டுபிடித்திருந்த மார்க்கோனி திருத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். 1931ம் ஆண்டு. பெப்ருவரி 12ம்தேதி. வத்திக்கான் வாரலாற்றில் பொன்னான நாட்களில் ஒன்று. திருத்தந்தைக்கென வானொலி ஒன்று தனது ஒலிபரப்புக்குத் தயாரானது. திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் முன் முழந்தாளிட்டு அவர் கரங்களை முத்தி செய்த பின்னர் ஒலிவாங்கியைப் பிடித்தார் மார்க்கோனி. அவரின் ஒலி அலைகள் காற்றில் வான் அலைகாளாகச் சிதறின. இயற்கையின் புதிரான சக்திகளை மனிதன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பெருந்துணையுடன் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. திருத்தந்தையின் குரல் உலகெங்கும் கேட்க வழி செய்தது என்று பேசினார். பின்னர் திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் பக்கம் திரும்பி, திருத்தந்தையே! தாங்கள் என்னிடம் செய்யப் பணித்த பணியை இன்று உம்மிடமே திருப்பி அளிக்கின்றேன். தங்களது செய்தி உலக மக்கள் எல்லாரும் கேட்கச் செய்யுங்கள் என்றார்.
அச்சமயத்தில் ஒரு நிருபர் எழுதியிருக்கிறார்: இத்தருணத்தில் அகில உலகும் காத்திருக்கிறது. கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய திருத்தந்தை, இந்தப் புதிய கருவி மூலம் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார். அப்போது நேரம் சரியாக மாலை 4.49. அது 1931ம் ஆண்டு பெப்ருவரி 12 என்று
திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் இலத்தீனில் தான் கைப்பட எழுதிய முதல் வானொலிச் செய்தியைக் கணீர் குரலில் வாசித்தார். அவருடைய செய்தி திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாய் நற்செய்தியின் உலகளாவியத் தன்மையை வலியுறுத்துவதாய் அமைந்திருந்தது. வானங்களே! கேளுங்கள். பூவுலகே! பூமியின் கடைக்கோடியில் வாழ்பவர்களே என் வாயிலிருந்து வருவதை உற்றுக் கேளுங்கள் என்றார்.
அந்நாளிலிருந்து வத்திக்கான் வானொலி தூய பேதுருவின் வழித்தோன்றலின் குரலை ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) ஒலிபரப்பி வருகிறது. எனவே திருத்தந்தையின் வானொலி உலகப் பாரம்பரியச் சொத்துக்களில் விலைமதிப்பற்ற ஒன்று.







All the contents on this site are copyrighted ©.