2012-07-18 16:14:16

திருஅவையில் திருப்புமுனைகள் – இயேசு சபையின் 28வது அதிபர் அருள்தந்தை பேத்ரோ அருப்பே


ஜூலை18,2012. 1 RealAudioMP3 1904ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இஸ்பெயின் நாட்டு பாஸ்க் பகுதியில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே. மருத்துவம் படித்த இவர் ஜப்பானுக்கு மறைப்பணியாளராக அனுப்பப்பட்டார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் அணுகுண்டால் தாக்கப்பட்ட போது அதன் கொடுமையான விளைவுகளை நேரில் கண்டவர், காயமடைந்த பலருக்குச் சிகிச்சை அளித்தவர். ஜப்பானில் இயேசு சபை மாநில அதிபராக பணியாற்றிய இவர், 1965ம் ஆண்டு உரோமையில் நடைபெற்ற இயேசு சபையினரின் 31வது பொதுப் பேரவையில் அச்சபையின் 28வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இயேசு சபையை ஆரம்பித்த புனித இலொயோலா இஞ்ஞாசியாருக்குப் பின்னர், இப்புனிதர் பிறந்த பாஸ்க் பகுதியிலிருந்து வந்த இரண்டாவது சபை அதிபராவார் தந்தை அருப்பே. தந்தை அருப்பே அவர்களது சபை அதிபர் பணி மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானங்களுக்கேற்ப கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெற்ற மாற்றங்கள் வழியாக இயேசு சபையை வழிநடத்த வேண்டியிருந்தது. தந்தை அருப்பே அவர்களின் நண்பரும் ஆலோசகருமான அருள்தந்தை Vinnie O’Keefe சொன்னார் : “அருப்பே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஒளியில் இயேசு சபையை மீண்டும் நிறுவிய இரண்டாவது இலொயோலா இஞ்ஞாசி” என்று. இயேசு சபையினர் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்பதில் கருத்தாய் இருந்தார் தந்தை அருப்பே,. 1975ம் ஆண்டில் இவர் கூட்டிய இயேசு சபையினரின் 32வது பொதுப் பேரவை இவரது தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தருணமாக இருந்தது.
“இன்று நமது மறைப்பணி விசுவாசத்திற்குப் பணி செய்வதும் நீதியை ஊக்குவிப்பதும்” என்ற கொள்கை இந்த 32வது பொதுப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. ஏழைகளுக்காக உழைக்க வேண்டுமென்ற தந்தை அருப்பே அவர்களின் கனவு இந்தப் பேரவையின் கொள்கை எண் 4ல் தெளிவாக விளக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள விசுவாசமும், நற்செய்தியை அறிவிப்பதற்கான நமது மறைப்பணியும் நீதியை ஊக்குவிப்பதிலும் சமுதாயத்தில் குரலற்றவர்கள் மற்றும் அதிகாரமற்றவர்களோடு தோழமையுணர்வு கொள்வதிலும் இருக்கின்றன என்று அந்த எண் விளக்கியது. சமூகநீதியையும் கத்தோலிக்க விசுவாசத்தையும் மையப்படுத்திய இயேசு சபையினரின் அனைத்துப் பணிகளையும் இந்த எண் தெளிவாக விளக்கியது. 1970களில் உலகில், குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காணப்பட்ட அரசியல் சூழல், சமூகநீதிக்காக உழைப்பதற்கான இச்சபையினரின் பணிக்கு கடும் துன்பங்களை ஏற்படுத்தும் என்பதை தந்தை அருப்பே நன்றாகவே அறிந்திருந்தார். ஏனெனில் அக்காலத்தில் இலத்தீன் அமெரிக்க நாடுகள் பாசிசக் கொள்கைகளால் மட்டுமல்ல, கம்யூனிச அச்சுறுத்தலில் இந்நாடுகள் அடிபணிந்து விடாதபடிக்கு இவற்றை அமெரிக்க ஐக்கிய நாடு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இயேசு சபையினர் தங்களது பணியை சமூகநீதிக்காக வெளிப்படையாகத் அமைத்துக் கொள்வது மிகத் துணிச்சலுடன் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக அவர்களுக்கு இருந்தது. இயேசு சபையை அரசியலாக்குகிறார்கள் என்று சிலர் நினைக்கும் அளவுக்கு இப்பணி இருந்தது. ஏனெனில் இப்பணி குறித்த தீர்மானம் அந்தப் பொதுப் பேரவையில் கடும் சூடான வாதங்களுக்கு உள்ளாகி, கடைசி நாள்வரை அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறாமலே இருந்தது. இறுதியில் அப்பேரவையின் இறுதி நாளான 1975ம் ஆண்டு மார்ச் 7ம் தேதிதான் பெரும்பான்மை வாக்குகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல விமர்சனங்களுக்கு மத்தியில் இயேசு சபையினர் தங்களது நம்பிக்கைகள் மற்றும் ஏழைகள் மத்தியில் பணி செய்வதற்கான தங்களது அர்ப்பணத்தில் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் பணி செய்த 47 இயேசு சபையினரும் ஏழைகள் மத்தியில் செய்யும் பணிகளை விட்டுவிட்டு ஒரு மாதத்துக்குள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லாவிடில் அவர்களைக் கொன்றுவிடுவதாக அந்நாட்டின் மரணப்படை அமைப்பு 1977ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி அச்சுறுத்தல் விடுத்தது. ஆனால் எல் சால்வதோரில் பணியாற்றிய இயேசு சபையினரைக் கலந்தாலோசித்த பின்னர், அதிபர் தந்தை அருப்பே “எங்கள் குருக்கள் மறைசாட்சிகளாக வாழ்வை முடிப்பார்களேதவிர நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஏழைகளோடு இருக்கிறார்கள்” என்று அந்த அமைப்புக்குப் பதில் சொன்னார். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர்தான் புகழ்பெற்ற விடுதலை இறையியலாளர் இயேசு சபை அருள்தந்தை Rutilio Grande எல் சால்வதோரில் கொல்லப்பட்டார். 1989ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி எல் சால்வதோரிலுள்ள மத்திய அமெரிக்க இயேசு சபை பல்கலைக்கழகத்தின் ஆறு இயேசு சபை குருக்களும் அவர்கள் இல்லப் பணியாளும் அவரது மகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1980ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி பேராயர் ஆஸ்கார் ரொமேரோ திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். எல் சால்வதோரில் உள்நாட்டுக் கலவரம் நடந்த அக்காலத்தில் சுமார் 75 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆயினும் இத்தனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தந்தை அருப்பேயின் ஆதரவுடன் இயேசு சபையினர் நீதிக்கானத் தங்களது பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.
இத்தகைய ஆழமான ஆன்மீகமும் மனஉறுதியும் கொண்டிருந்த தந்தை அருப்பே பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் இயேசு சபை அருள்தந்தை ஜெரி ரொசாரியோ. தந்தை அருப்பே அவர்களின் எண்ணத்தில் இயேசு சபை வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள இவர், இரத்த தான இயக்கத்தின் நிறுவனராக இருந்து உறுப்பு தானங்கள் குறித்து எடுத்துச் சொல்லி வருகிறார். RealAudioMP3
1981ம் ஆண்டில் தூர கிழக்கு நாடுகளிலுள்ள இயேசு சபை இல்லங்களைப் பார்வையிடுவதற்காக நீண்ட பயணம் மேற்கொண்டு உரோம் திரும்பிய தந்தை அருப்பே, அவ்வாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்தில் பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். வலது பக்கம் முழுவதும் செயலிழந்தார். ஓரிரு வார்த்தைகளையே அவரால் பேச முடிந்தது. இயேசு சபை அதிபர்கள் பொதுவாக இறப்புவரை பதவியில் இருப்பார்கள். ஆனால் தந்தை அருப்பே அவர்கள்தான் இந்தப் பதவியிலிருந்து விலகிய முதல் இயேசு சபை அதிபராவார். இவரது இந்தப் பதவி விலகல் 1983ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி பொதுப்பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்பேரவைக்கு அவர் சக்கர நாற்காலியில் வந்த போது அனைவரும் கரகோஷம் எழுப்பினர். அவர் எழுதிய செபமும் அன்று வாசிக்கப்பட்டது.
“எப்போதையும்விட இப்போது கடவுளின் கரங்களில் என்னை அதிகமாகக் காண்கிறேன். எனது இளமையிலிருந்து நான் விரும்பியது இதுதான். உண்மையில் முழுவதும் கடவுளின் கரங்களில் இருப்பதை அறிந்து அதை நான் உணருவது மிக ஆழமான ஆன்மீக அனுபவமாக இருக்கின்றது”.
தந்தை அருப்பே பக்கவாதத்தால் தாக்கப்பட்டு பேச்சிழந்து இருந்த நிலையில், அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் உட்பட பலர் அவரைச் சந்தித்திருக்கின்றனர். தந்தை அருப்பே, தனது 84வது வயதில் 1991ம் ஆண்டு பிப்ரவரி 5ம் நாள் உரோம் இயேசு சபை தலைமையகத்தில் உயிர் துறந்தார். அப்போதைய இத்தாலிய பிரதமர் ஜூலியோ அந்த்ரேயோத்தி உட்பட பலர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். தந்தை அருப்பே அவர்களது உடல் உரோம் பொதுக் கல்லறையில் இயேசு சபையினரின் கல்லறை மாடத்தில் அடக்கப்பட்டது. ஆயினும் தற்போது உரோம் இயேசு சபையினரின் ஜேசு ஆலயத்தில் தந்தை அருப்பே அவர்களது கல்லறை உள்ளது.










All the contents on this site are copyrighted ©.