2012-07-18 16:28:21

ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை


ஜூலை,18,2012. இம்மாதம் 27 முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முடிய இலண்டன் நகரில் நடைபெறவிருக்கும் 30வது ஒலிம்பிக் போட்டிகளையொட்டி இங்கிலாந்து வேல்ஸ் ஆயர் பேரவை இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
"இணைந்து கொள்ள இன்னும் நேரம் உள்ளது" என்ற கருத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகள் எவ்வித வன்முறையும், ஆபத்தும் இன்றி முடிவடைய கத்தோலிக்கர்கள் தங்கள் செபங்கள் வழியே இணையவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்களும், ஏனைய கிறிஸ்தவர்களும் இணைந்து இப்போட்டிகளின்போது எந்தெந்த வழிகளில் உதவ முடியும் என்பதை இவ்வறிக்கை விளக்கிக் கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவுக்கு அடுத்த நாள், ஜூலை 28, சனிக்கிழமையன்று Westminster பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிகழும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டியையொட்டி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி மற்றொரு சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதன் முக்கிய குறிக்கோள்களான ஒற்றுமை, கூட்டுறவு ஆகிய எண்ணங்களை தொடர்ந்து வலியுறுத்த, ஆயர் பேரவையுடன் இணைந்து அருளாளர் இரண்டாம் ஜான்பால் விளையாட்டு அறக்கட்டளை ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.