2012-07-17 16:31:52

சிரியா : Mussalahaவின் அமைதி முயற்சிகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆதரவு


ஜூலை 17,2012. சிரியாவில் போரிட்டுவரும் தரப்புக்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்துவதற்கு Mussalaha என்ற பல்சமய அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளுக்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை தனது ஆதரவை வழங்குவதாக Aleppo அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Giuseppe Nazzaro கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது பாதையாக உருவாகியுள்ள Mussalaha பல்சமய அமைப்பு, அந்நாட்டில் பல்வேறு அரசியல், சமூக மற்றும் சமயக் குழுக்கள் மத்தியில் உரையாடல் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் ஆயர் கூறினார்.
மனித வாழ்வு கடவுளின் கொடை, எனவே எந்தக் கடும் மோதல்களிலும், வாழ்வு, கடவுள் தனக்குக் கொடுத்திருக்கும் கொடையெனக் கருதி, எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அனைவரும் அதை மதித்து வாழ வேண்டும் எனவும் ஆயர் Nazzaro கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, சிரியாவின் பிரச்சனை குறித்து ஐ.நா.பிரதிநிதி கோஃபி ஆனன், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin ஐச் சந்திப்பதற்குத் தயாரித்து வரும்வேளை, தமாஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் கடும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.