2012-07-16 15:00:13

திருஅவையின் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு இறைவன் நம் அனைவரையுமே அழைத்துள்ளார் - திருத்தந்தை


ஜூலை,16,2012. இறைவனின் வார்த்தையை அறிவிக்கும் பணியாளர்கள் பணத்தின் மீதும், சொந்த வசதிகள் மீதும் பற்று கொண்டிருக்கக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற நகராட்சிகளில் ஒன்றான Frascatiயின் பசிலிக்காவுக்கு முன்பக்கம் அமைந்துள்ள வளாகத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருஅவையின் பல்வேறு பணிகளைச் செய்வதற்கு இறைவன் நம் அனைவரையுமே அழைத்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, துறவறம், குருத்துவம், இல்லறம் என்ற எவ்வகை வாழ்வானாலும் அதை இறைவனின் அழைப்பாக இளையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
இறைவனின் வார்த்தைகளைப் பரப்பும் வேளையில் நாம் எப்போதும் வரவேற்பு பெறப்போவதில்லை என்பதைத் தன் மறையுரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை, வரவேற்பும், கரவொலிகளும் பெறவில்லை என்றாலும், நன்மையே உருவான இறைவனின் அன்பை வெளிப்படுத்த நாம் அனைவருக்கும் கடமையுண்டு என்று கூறினார்.
நமது பணிகளை ஏற்க மறுக்கும் தீய சக்திகளோடு நமக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த, நமது காலடியில் பதிந்துள்ள தூசியையும் அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து அகலவேண்டும் என்று இயேசு கூறும் அறிவுரைக்கு செவிமடுப்பது இன்றைய அவசியமாகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
Frascatiயில் 1980ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் திருப்பலி நிகழ்த்தியதற்கு 32 ஆண்டுகள் கழித்து, இஞ்ஞாயிறன்று அங்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருப்பலி நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.