2012-07-16 15:26:17

கவிதைக் கனவுகள் – உலகில் உனக்கென்று ஓரிடம்


நடந்து வந்த பயணத்தின் தூரம்
முழுவதும் தெரிவதில்லை
திரும்பிப் பார்த்து அசைபோடும்வரை.
பயணப் பாதையில் கடந்து வந்த
முள்ளும் மலரும்
காரிருளும் கட்டாந்தரையும்
சந்திப்புகளும் சவால்களும்
பாசங்களும் பரிதாப அலைகளும்
முழுவதும் புரிவதில்லை
நின்று நிதானித்து சிந்திக்கும்வரை.
எத்தனை சவால்கள் சங்கடங்களுக்கு மத்தியிலும்
உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும் என உணர்த்தின
கடந்து வந்த பாதை அனுபவங்கள்.
நல்மாற்றத்திற்கு விதை தூவின.
பயணத்தில் பக்கத்தில் நடந்தவர்கள்
பாதைகளையும் பார்த்தேன்.
அப்போது ஆன்மாவின் குரல் பேசியது
பிறரைப் பார்த்து ஏங்காதே, ஏமாறாதே.
உனது பாதை வேறு, பிறரது பாதை வேறு
நீ தொட எட்டும் வானம் வேறு, பிறரது வானம் வேறு
உனது உலகம் வேறு, பிறரது உலகம் வேறு.
நீ பிறரோடு வாழ்ந்தாலும்
உலகில் உனக்கென்று உள்ளது ஓரிடம்.
அதைச் சொர்க்கமாக்கு. அதுவே உன் அழைப்பு








All the contents on this site are copyrighted ©.